ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறிச் செல்கிறது

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறிச் செல்வதால் அதிலிருந்து விலகிக் கொள்வதாக இசையமைப்பாளர் "ஹிப் ஹாப் தமிழா' ஆதி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறிச் செல்கிறது

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறிச் செல்வதால் அதிலிருந்து விலகிக் கொள்வதாக இசையமைப்பாளர் "ஹிப் ஹாப் தமிழா' ஆதி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் "ஹிப் ஹாப் தமிழா' ஆதியும் ஒருவர். இவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஆதி தனது முகநூல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா, அலங்காநல்லூர், கோவை ஆகிய இடங்களில் நடக்கும் போராட்டத்துக்கு நேரில் சென்று எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டேன். ஆனால், கோவையில் போராட்டத்தில் கலந்துகொண்டபோது அங்கே நடந்த சில விஷயங்கள் என்னை மிகவும் புண்படுத்திவிட்டன.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கும்போது யாரென்று தெரியாத சிலர் இந்தப் போராட்டத்தை திசை திருப்பும் விதமாக தேச விரோத செயல்களை முன்னிறுத்தி கோஷமிடுகின்றனர். இன்னும் சிலபேர் தகாத வார்த்தைகளில் வாசகங்களை எழுதி, கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் குழுமியிருந்த வ.உ.சி. மைதானத்துக்கு வெளியே யாரென்றே தெரியாத சிலபேர் தகாத வார்த்தைகளால் மத்திய அரசை வசைபாடிக் கொண்டிருந்தனர். மேலும் சிலர் தனித் தமிழ்நாடு வேண்டும் என முழக்கமிட்டனர்.
எதற்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று எண்ணும்போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்ற வருத்தத்திலேயே இந்தப் போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு வெற்றி கிடைத்தால்தான் இத்தனை இளைஞர்களின் போராட்டத்திற்கு மரியாதை கிடைக்கும். நல்ல விஷயத்துக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று அவர் பேசியுள்ளார்.

"மாணவர்கள் யோசித்து செயல்பட வேண்டும்'

நடிகர் விவேக்: ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது. உலகமே நம் மாணவர்களின் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது. அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று. போராட்ட களத்தில் தனிநபரை கொச்சைப்படுத்தும் கோஷங்கள், தேசியக்கொடி அவமதிப்பு போன்றவை நிகழக் கூடாது. நிதானம் அவசியம். என்போல் நீங்கள்(மாணவர்கள்) அனைவரும் கலாமின் சீடர்கள். இப்போது அவர் இருந்தால் என்ன முடிவெடுத்திருப்பார்? யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் விவேக்.
சமுத்திரக்கனி: ஆதியின் பேச்சு குழப்பமளிக்கிறது. நான் கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். போராட்டக்காரர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள். போராட்டத்தில் உடன்பாடு இல்லாதபட்சத்தில் அமைதியாக இருங்கள். மக்கள் கூடும் இடத்தில் சூழ்ச்சி செய்யத்தான் செய்வார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் அதை முறியடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com