132 இடங்களில் போராட்டம்: முடங்கியது சென்னை

சென்னையில் 132 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால், மாநகரம் முழுவதும் திங்கள்கிழமை முடங்கியது.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல் துறையின் தடியடியைக் கண்டித்து திங்கள்கிழமை சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல் துறையின் தடியடியைக் கண்டித்து திங்கள்கிழமை சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சென்னையில் 132 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால், மாநகரம் முழுவதும் திங்கள்கிழமை முடங்கியது.
மெரீனாவில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததாலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாலும் சென்னையில் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது.
இதன்காரணமாக ஆங்காங்கே பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சில இடங்களில் வன்முறையாகவும் மாறின. இதனால், பெரும்பாலான இடங்களில் கடைகள் மூடப்பட்டன. அதேபோல் நண்பகல் 12 மணிக்கு பின்னர் முக்கியமான சாலைகளிலும், சந்திப்புகளிலும், அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கற்களையும் வீசினர். ஆகவே, சென்னையில் மாநகர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது.
அத்துடன் ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் குறைவான அளவிலேயே இயங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். மாணவர்களும், அரசு- தனியார் நிறுவன ஊழியர்களும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அவதியடைந்தனர்.
சுமார் 132 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில், 113 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இரவு 8 மணி வரை முடங்கியது. 6 மணிக்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் போராட்டம் கைவிடப்பட்டதால், அதன் பின்னர் போக்குவரத்து சீரடையத் தொடங்கியது.
இருப்பினும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வாலாஜா சாலை, பெசன்ட் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பாரதி சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் போக்குவரத்து சீராவதற்கு பல மணி நேரமானது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.
போக்குவரத்தை சீராக்கப் போராடிய இளைஞர்கள்! வன்முறையை சம்பவங்களால், நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சாலையில் சென்ற இளைஞர்களும், பெண்களும் பல்வேறு திசைகளிலும் நின்று போக்குவரத்தைச் சீர்செய்து, வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர். சில இடங்களில் பெண்களும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் பங்குகளில் கூட்டம்: அசாதாரண சூழல் காரணமாக பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசலை நிரப்புவதற்கு படையெடுத்தனர். பலர் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டனர்.
வடசென்னையில்...: வடசென்னையில் சுமார் 50 இடங்களில் திங்கள்கிழமை பல்வேறு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
வன்முறை சம்பவத்தையடுத்து, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 100 மீட்டருக்கு ஒரு இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். தொழிற்சாலைகளில் ஷிப்ட் முடிந்து வந்தவர்களையும் வீட்டிற்குச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைகளிலேயே தங்கி இருந்தனர்.
இதுதவிர, பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மாலை 6 மணியளவில் போராட்டம் தானாகவே விலக்கிக் கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
குப்பங்கள் போர்க்களமாகின! கடற்கரையில் மாணவர்களுக்கு பட்டினப்பாக்கம் நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த சில மீனவர்கள், மாணவர்களுக்கு குடிநீர், பிஸ்கட், உணவு ஆகியவை வழங்கினர். அதையும் போலீஸார் சிறிது நேரத்தில் தடுத்தனர்.
இதேபோல், பாதுகாப்பு கருதி, மெரீனாவைச் சுற்றியுள்ள நொச்சிக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டாங்குப்பம், நடுகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் கடற்கரைக்குள் நுழையாமல் போலீஸார் தடுத்தனர். இதற்கிடையே, நடுகுப்பம், மாட்டாங்குப்பம், அயோத்தி குப்பம் ஆகிய பகுதிகளில் போலீஸாருக்கும்,போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதிகள் போர்க்களமாகக் காட்சியளித்தன. அங்கு செருப்பு,உடைந்த பாட்டில்கள், டயர்கள் ஆகியன சாலையில் குவிந்து கிடந்தன. நடு குப்பத்தில் மீன் சந்தை, குடிசை, மின் மாற்றி ஆகியன தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால், புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனால், அந்தப் பகுதி மின் விநியோகத்தை போலீஸார் துண்டித்தனர். மேலும் குப்பங்களை போலீஸார் சூழ்ந்து இருந்ததால், அந்தப் பகுதி தனித்தீவாகவும், போர்க்களமாகவும் காட்சியளித்தது.
64 வாகனங்களுக்கு தீ வைப்பு: 64 வாகனங்கள் வன்முறைக் கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. இதில், 58 காவல் துறைக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களாகும், 6 கார்களாகும். இதேபோல், எம்.கே.பி. நகர் காவல் நிலையம் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
மேலும், மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, எம்.கே.பி. நகர் மேற்கு அவென்யூ சாலை, அரும்பாக்கம் 100 அடி சாலை உள்ளிட்ட 5 இடங்களில் காவல் உதவி மையங்கள் தாக்கப்பட்டு, உடைக்கப்பட்டுள்ளன.
96 காவலர்கள் காயம்: வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்றபோது ஒரு கூடுதல் ஆணையர், ஒரு துணை ஆணையர், 4 உதவி ஆணையர்கள், 4 ஆய்வாளர்கள்,8 உதவி ஆய்வாளர்கள், 78 காவலர்கள் என மொத்தம் 96 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 64 போலீஸார், 54 இளைஞர்கள்-பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேருக்கு எலும்புமுறிவும், ஒருவருக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 26 பொதுமக்களும், 9 போலீஸாரும் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 டாஸ்மாக் கடைகள் சேதம்: இதேபோல, அரும்பாக்கம் 100 அடி சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை, அதே பகுதியில் மற்றொரு டாஸ்மாக் மதுபானக் கடை,புரசைவாக்கத்தில் உள்ள இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் என மொத்தம் 4 கடைகளை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடினர்.
இதுதொடர்பாக அந்தந்த பகுதி போலீஸார் வழக்குகள் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
89 ஆண்டு பாரம்பரிய கட்டடம் சேதம்: சென்னையின் பாரம்பரியமிக்க கட்டடத்தில் திருவல்லிக்கேணி காவல் நிலையம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையக் கட்டடம் இருக்கிறது.
1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்ததால், அதைப் புனரமைக்க காவல் துறை திட்டமிட்டிருந்தது. இதற்கான நிதியையும் அரசு ஒதுக்கிவிட்டது. ஆனால் அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட இருப்பதால், காவல் நிலையத்தை புனரமைக்கும் பணி ஒத்திப்போடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தக் கட்டடம் தீக்கிரையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com