அலங்காநல்லூர், கோவையில் தடியடி: போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சிக்கும் போலீஸார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சிக்கும் போலீஸார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் போலீஸார் 5 பேர் காயமடைந்தனர்.
அலங்காநல்லூர் வாடிவாசல் மற்றும் கேட்டுக்கடைப் பகுதியில் போராட்டம் தொடர்ந்தது. இதில் வாடிவாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போலீஸார் அகற்றினர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த போலீஸாரும் திரும்பப் பெறப்பட்டனர். இதனால் வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் கேட்டுக்கடைப் பகுதிக்குச் சென்றனர்.
போலீஸார் தடியடி: போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மதுரை டி.ஜ.ஜி. ஆனந்த்குமார் சோமானி, எஸ்.பி. விஜயேந்திரப் பிதாரி ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் கேட்டுக்கடைக்குக் சென்று போராட்டத்தை கைவிடுமாறும், தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் அதை ஏற்கவில்லை. எனவே, அவர்களை கைது செய்ய போலீஸார் தயாராயினர். இதனால் போலீஸாரை தடுக்கும் விதமாக கூட்டத்தின் நடுவில் ஆண்கள் அமர்ந்திருக்க அவர்களைச் சுற்றி பெண்கள் கைகளை கோர்த்துக்கொண்டு மனிதச் சங்கிலி அமைத்தனர்.
எனவே, பெண் போலீஸார் கூட்டத்துக்குள் சென்று மனிதச் சங்கிலி அமைத்திருந்த பெண்களை பிரித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் உள்ளே சென்று ஆண்களை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர். அப்போது வெளியில் இருந்த போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 2 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
போலீஸார் 5 பேர் காயம்: போலீஸ் தடியடியைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்த தோப்புகளுக்குள் பதுங்கிக் கொண்டு போலீஸார் மீது கற்களையும், கம்புகளையும் வீசி தாக்கினர். இதில் 5 போலீஸாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 70க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து சமயநல்லூர், வாடிப்பட்டி காவல்நிலையங்களில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
கோவையில்...: கோவையில் 7-வது நாளாக திங்கள்கிழமையும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வெளியேற மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மைதானத்தில் கூடியிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பிறகு மைதானத்தை விட்டு வெளியேறி, அவிநாசி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர்.
கல்வீச்சு: அதையடுத்து அவிநாசி சாலை, கொடிசியா அருகே பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடினர்.
அவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தியதால், அவர்கள் அருகில் இருந்த தனியார் கல்லூரி வளாகத்தினுள் தப்பி ஓடினர். பின்னர் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பேருந்துகள் உடைப்பு: கோவை, காந்திபுரத்தில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் கூடிய மாணவர்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுக்கக் கோரி பேருந்துகளை மறித்து தர்னாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
அதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தனர். சத்தி சாலையிலும், மேட்டுப்பாளையம் சாலையிலும் இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
940 பேர் கைது: கோவை நகரின் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 78 பெண்கள் உள்பட 940 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்.
ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாணவர்களும், இளைஞர்களும் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களிடம் பேச்சு நடத்துவதற்காக போலீஸார் திங்கள்கிழமை குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஒரு சிலர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லலாம் என்றும், ஒரு பகுதியினர் போராட்டத்தை தொடர்வது என்றும் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் போலீஸார் பேச்சு நடத்தியும் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தானபாண்டியன், அங்கு கூடியிருந்த கூட்டத்தை சட்ட விரோதக் கும்பல் என அறிவித்தார். 15 நிமிடங்கள் அவகாசத்துக்குள்ள அவர்கள் கலைந்து செல்லாவிட்டால் வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
கூட்டத்தின் ஒரு பிரிவினர் பேருந்து நிலையத்துக்குள் புகுந்தனர். அப்போது சித்தி விநாயகர் கோயில் முன்பிருந்த கண்காணிப்பு கேமராவையும், கர்நாடக அரசுக்கு சொந்தமான பேருந்தின் கண்ணாடியையும், தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடியையும் அவர்கள் அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்த போலீஸார் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதில் ஒரு மாணவர் காயமடைந்தார்.
கலவர பூமியான அலங்காநல்லூர்
தடியடியைத் தொடர்ந்து அலங்காநல்லூருக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வீடுகளில் முடங்கினர். சாலைகளில் காலனி குவியல்கள், கற்கள், கம்புகள் என கலவர பூமி போல காட்சியளித்தது. அலங்காநல்லூருக்கு வரும் வழிகள் அனைத்திலும் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் வெளிநபர்களை அனுமதிக்க மறுத்தனர். இதேபோல பாலமேடு பகுதிக்கும் வாகனங்கள் மற்றும் ஆட்கள் செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து இருந்து அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் பேருந்து நிலைய சந்திப்பில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்கும் போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com