ஜல்லிக்கட்டு தடை நீங்க சரியான நடைமுறை

ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்தவிதத் தடைகளும் இல்லாமல் நடைபெற இப்போதுதான் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டு தடை நீங்க சரியான நடைமுறை

ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்தவிதத் தடைகளும் இல்லாமல் நடைபெற இப்போதுதான் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக திங்கள்கிழமை (ஜன.23) மாலை நடைபெற்ற தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தில் 2017-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட மசோதாவை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
2011-ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு அவை தடை செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி, பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவற்றுடன் காளையையும் சேர்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தடை: இதனால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-இல் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவும், மகாராஷ்டிரத்தில் காளை மாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை விதித்தது.
மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறைச் சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளதால், இது மத்திய சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு எதிராக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனாலும் தடை நீடித்தது.
பிரதமர் வாக்குறுதி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஜனவரி 19-ஆம் தேதி தில்லிக்கு நேரில் சென்று முறையிட்டேன்.
அப்போது, மத்திய அரசின் அறிவிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி அளித்தார்.
சட்டப்பூர்வ ஆலோசனை: ஜல்லிக்கட்டு நடைபெற மாநில அரசு உடனடியாக சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைச் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு முரணாக, தமிழக அரசு, மாநிலத்துக்கான சட்ட திருத்தத்தை இயற்ற இயலும். எனினும், அந்தச் சட்டத்துக்கு மத்திய அரசின் பரிந்துரையுடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.
அவசரச் சட்டம் ஏன்? தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்கியது. சாதாரணமாக சட்ட முன் முடிவுகளுக்கான சட்டப்பேரவை ஒப்புதல் கூட்டத் தொடரின் கடைசி நாளிலேயே பெறப்படும் என்பதாலும், அதன் பின்னர், தமிழக ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதாலும், இவை அனைத்துக்கும் காலதாமதம் ஏற்படும் என்பதால், அவசரச் சட்டம் பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே அவசரச் சட்டம் ஜனவரி 21-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டன. எனவே, ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்த விரும்பும் ஊர் மக்கள் தாங்கள் விரும்பும் நாளில் அதனை நடத்திக் கொள்ள முடியும். ஜல்லிக்கட்டு நடத்த சரியான நடைமுறை தற்போதுதான் பின்பற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com