ஜல்லிக்கட்டு: புதிய மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடையின்றி நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா, சட்டப் பேரவையில் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.
ஜல்லிக்கட்டு: புதிய மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடையின்றி நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா, சட்டப் பேரவையில் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.
இதற்காக பேரவைக் கூட்டம் மாலை 5 மணிக்குக் கூடியது. இந்த சட்டத் திருத்த மசோதாவை முதல்வரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்த தினத்தன்றே விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்றுவதற்கு பேரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக பேரவை விதிகளைத் தளர்த்துவதற்கு குரல் வாக்கெடுப்பு மூலம் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின், சட்டத் திருத்த மசோதா மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
சட்டத் திருத்த மசோதா: தமிழ்நாடு மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதை உறுதி செய்வதை நிச்சயிக்கும் வகையிலும் 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என திருத்த மசோதாவின் தலைப்பாக இடம்பெற்றுள்ளது.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் ஐந்து திருத்தங்கள் செய்யப்படுவதுடன், புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்கவும் மசோதா வகை செய்கிறது.
திருத்தங்கள் என்னென்ன? விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 2-ஆவது பிரிவில் ஒரு உட்கூறு புகுத்தப்படுகிறது. அதாவது ஜல்லிக்கட்டு என்பது மாநில அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் ஜனவரி முதல் மே மாதங்கள் வரை நடத்தப்படும். இத்தகைய நாள்களில் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றும் நோக்கத்துடன் காளைகளை ஈடுபடுத்தி நடத்தப்படும் ஒரு நிகழ்வு என பொருள்படும். இதில், மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா ஆகியனவும் உள்ளடங்குவதாக இருக்கும்.
முதன்மைச் சட்டத்தின் 3-ஆவது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, மாநில அரசால் இயற்றப்படுகின்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்து சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு ஏன்? இந்த இரண்டு திருத்தங்களுடன், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 11-ஆம் பிரிவின் 3-ஆவது உட்பிரிவில் உள்ள அம்சமானது திருத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றவும், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுதல் வேண்டும்.
இதேபோன்று, 22-ஆவது பிரிவிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்மைப் பிரிவான 22-ஆவது பிரிவானது, விலங்கினங்களை பயிற்சி மற்றும் காட்சிப்படுத்துதல் தொடர்பாக விவரிக்கிறது. தமிழக அரசின் திருத்தத்தின்படி, 22-ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கும் அம்சமானது ஜல்லிக்கட்டு நடத்துவதற்குப் பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வதை தடுப்புச் சட்டப் பிரிவிலும்...விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவிலும் மேலும் ஒரு சிறப்புக் கூறை தமிழக அரசு சேர்த்துள்ளது. அதாவது, மத்திய அரசின் சட்டப்படி 27-ஆவது பிரிவின் பி பிரிவானது, மிருகங்களை கல்வி தொடர்பாகவோ அல்லது அறிவியல் தொடர்பாகவோ காட்சிப்படுத்தக் கூடாது எனக் கூறுகிறது.
இந்தப் பிரிவுக்குப் பிறகு தமிழக அரசு கூடுதலாக ஒரு பிரிவைச் சேர்த்துள்ளது. அதாவது, சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழவும், தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை உறுதி செய்யும் பொருட்டும், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி-முன்னேற்றும் நோக்கத்துடனும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுதல் வேண்டும் என்ற பிரிவை கூடுதலாக இணைத்துள்ளது.
மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 28-ஆவது பிரிவானது, மதத்தின் பெயரால் விலங்குகளுக்கு ஏற்படும் வதை குறித்து விவரிக்கிறது. இந்தப் பிரிவில் ஜல்லிக்கட்டைப் காப்பதற்காக கூடுதலாக ஒரு காப்புப் பிரிவு சேர்க்கப்படுகிறது.
அதாவது, இந்த 28-ஆவது சட்டப் பிரிவில் அடங்கிருப்பது எதுவும் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி மற்றும் அதனை முன்னேற்றுவதற்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்குப் பொருந்தாது. அவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு இந்தச் சட்டத்தின்படி ஒரு குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்ற காப்புப் பிரிவை தமிழக அரசு கூடுதலாகச் சேர்த்துள்ளது.
குரல் வாக்கெடுப்பு: தமிழக அரசு ஏற்கெனவே கொண்டு வந்த அவசரச் சட்டம் கடந்த 21- ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், இந்த அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்கும் வகையில் திருத்தச் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதா மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேசினர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இதன் பின், இந்த சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com