ஜல்லிக்கட்டுக்கான சட்டம்: ஓ.பன்னீர்செல்வம் - மு.க.ஸ்டாலின் விவாதம்

ஜல்லிக்கட்டுக்காக சட்டம் கொண்டு வந்தது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே பேரவையில் விவாதம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்காக சட்டம் கொண்டு வந்தது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே பேரவையில் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை, விலங்குகள் வதை தடுப்பு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:
தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டைக் காப்பாற்றிட வழிவகை செய்திட முனைந்துள்ள சட்ட மசோதவை வரவேற்கிறேன். மாணவர் சக்தி ஆட்சியைச் சிந்தித்துச் செயல்பட வைக்கக்கூடிய சக்தி என்பதை உணர்ந்திருக்கிறேன். 2009 -இல் திமுக ஆட்சியில் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டம்' கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் விளைவாக திமுகவின் ஆட்சி இருந்த வரையும், பிறகு, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும்கூட 2014 -ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு எவ்வித தடையும் இல்லாமல் நடைபெற்றது என்றார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசியது:
2009 -இல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மத்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை. மாநில அரசு கொண்டு வரும் சட்டம் என்பது மத்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டதாக இருப்பதுடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
ஒப்புதல் இல்லை: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை. இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடையை விதித்தது.
மு.க.ஸ்டாலின்: 2009 -இல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தால்தான் 2014 -ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை.
ஓ.பன்னீர்செல்வம்: சட்டத்தைத் தவறாகக் கொண்டு வந்துவிட்டு, அதில் பெருமை அடைவதற்கு ஒன்றும் இல்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாததால்தான் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தால்தான் 2014 -இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஜல்லிக்கட்டுப் போட்டி எவ்விதத் தடையும் இல்லாமல் நடைபெற்றது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்.
தற்போது ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவைத் திறந்த மனதுடன் வரவேற்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com