வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: ஸ்தம்பித்தது சென்னை

சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் நிலையம், கூடுதல் ஆணையர் கார் உள்பட பல்வேறு அரசு சொத்துகளுக்கு தீ வைத்தனர்.
ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய வாயிலில் தீக்கரையான வாகனங்கள்.
ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய வாயிலில் தீக்கரையான வாகனங்கள்.

சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் நிலையம், கூடுதல் ஆணையர் கார் உள்பட பல்வேறு அரசு சொத்துகளுக்கு தீ வைத்தனர்.
சென்னையில் 92 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் உடைத்ததோடு, சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் சென்னையின் முக்கியச் சாலைகள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.
அறவழியில் தொடங்கிய போராட்டம்: ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.17) முதல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை (ஜன.21) பிறப்பித்தார். தமிழக சட்டப்பேரவையிலும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவையிலும் திங்கள்கிழமை (ஜன.23) மாலை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
போலீஸார் அறிவுறுத்தல்: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதால்,போலீஸார் மெரீனா கடற்கரைக்கு திங்கள்கிழமை காலை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
வலுக்கட்டாயமாக...ஆனால், போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்காமல், போராட்டத்தைத் தொடர்ந்தனர். மெரீனாவில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இவர்களை அப்புறப்படுத்தும் அதே நேரத்தில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரீனாவுக்கு வரக் கூடிய அனைத்துச் சாலைகளுக்கும் போலீஸார் "சீல்' வைத்தனர்.
மெரீனாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள், சென்னை முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
மேலும், மெரீனா கடற்கரையை நோக்கி பல இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும் வாகனங்களில் வரத் தொடங்கினர். ஆனால், மெரீனாவுக்கு வரும் அனைத்துச் சாலைகளையும் போலீஸார் "சீல்' வைத்ததால், அவர்களால் முன்னேற முடியவில்லை. தங்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். கற்கள், பாட்டில்களை போலீஸார் மீது வீசி தாக்கினர். அதனைத் தொடர்ந்து, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து போலீஸார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசிக் கொண்டே இருந்தனர். இதனால் மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள இடங்கள் நாள் முழுவதும் போராட்டக் களமாக மாறியது.

காவல் நிலையத்துக்கு தீ
திருவல்லிக்கேணி அருகே ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலை வழியாக மெரீனாவுக்கு முன்னேற முயன்ற 500-க்கும் மேற்பட்டோரை திங்கள்கிழமை (ஜன.23) காலை 10 மணியளவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸார் மீது கற்கள், பாட்டில்களை வீசியதோடு, ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தை வெளிப் பக்கமாக பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்தனர். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர். அப்போது காவல் நிலையத்துக்குள் இருந்த 15 காவலர்கள் வெளியே வர முடியாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டனர்.
அந்தக் கும்பல் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலைத்த போலீஸார், காவல் நிலையத்துக்குள் சிக்கியிருந்த 15 காவலர்களையும் ஜன்னலை உடைத்து மீட்டனர்.

மீன் சந்தைக்கு தீ வைப்பு
ஐஸ்ஹவுஸ் நடுகுப்பம் அவ்வை சண்முகம் சாலையில் போராட்டக்காரர்கள், மெரீனா கடற்கரைக்குள் வருவதற்கு முயன்றனர். அப்போது அங்கு நின்ற துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைப் பார்த்த போராட்டக்காரர்கள், போலீஸார் அவர்கள் மீது கற்களையும்,பாட்டில்களையும் வீசினர். மேலும் அவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் அவ்வப்போது வீசினர். இதையடுத்து காவலர்கள் ஓடும் நிலையும் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த அவ்வப்போது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, அவர்களை விரட்ட போலீஸார் முயன்றனர். ஆனால் அவர்கள், கலைந்து செல்லாமல் போலீஸார் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அங்கிருந்த தினசரி மீன் சந்தைக்கு தீ வைத்தனர். அத்துடன் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

பேருந்துகள் மீது கல் வீச்சு
புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஒரு கும்பல் திடீரென அங்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் அந்தக் கும்பல், அங்கிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த மதுபாட்டில்களையும், பொருள்களையும் சூறையாடியது. இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இச் சம்பவத்தில் அந்த வழியாக சென்ற 10 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் இதனால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இவ்வாறு காலை தொடங்கி மாலை வரை மோதல்கள் நீடித்துக் கொண்டிருந்தன.

தீயில் கருகிய ஆவணங்கள், 25 இரு சக்கர வாகனங்கள்
தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், பெரும்பாலான பொருள்கள், காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த 25 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஜீப் ஆகியவை தீயில் கருகின. இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி விசாரணை நடத்தினார். போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கும் நடந்த இந்த மோதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் ஆணையர் சி.ஸ்ரீதர், துணை ஆணையர் ஜெயக்குமார் உள்பட பல போலீஸார் காயமடைந்தனர்.

காருக்கு தீ வைப்பு
எழும்பூர் பூந்தமல்லி சாலையில் ஹோட்டல் தாசப்பிரகாஷ் பகுதியில் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த இணை ஆணையர் சந்தோஷ்குமார் மற்றும் போலீஸார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது திடீரென ஒரு கும்பல் சந்தோஷ்குமாரின் காரை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.

92 பேருந்துகள் உடைப்பு
இந்த மோதலில் 92 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சுமார் 50 காவலர்கள் காயமடைந்தனர்; 5 காவலர்களின் மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல போலீஸார் விரட்டியடித்ததில், போராட்டக்காரர்கள் சிலரும் காயமடைந்தனர். இந்த மோதலில் ஈடுபட்டதாக சிலரைப் போலீஸார் கைது செய்தனர்.

20-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை
சென்னை முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. சுமார் 300 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 92 அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களால் ஓட்டுமொத்த சென்னையும் போராட்டக் களமாக மாறியது.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போராட்டக்காரரை தாக்கும் போலீஸார்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போராட்டக்காரரை தாக்கும் போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com