வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்தார்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:-
மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் கடந்த 6 நாள்கள் கண்ணியம், கட்டுப்பாட்டோடு செயல்பட்டனர். போலீஸாருக்கு பல்வேறு வகைகளில் ஒத்துழைப்பு அளித்தனர். இதன் பின்னர், மாணவர்கள் போராட்டத்துக்குள் சமூக விரோதிகள், தேச விரோத சக்திகள் புகுந்திருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும் வகையில், அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை நடத்திய பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதேவேளையில் ஒரு கும்பல் மட்டும் சமூக விரோதிகள், தேசவிரோத சக்திகள் தூண்டுதலினால் கடற்கரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது.
அவர்களிடம் அறவழியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இதை பயன்படுத்தி மெரீனாவுக்கு 8 பாதைகளின் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவ முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், அவர்களைத் தடுத்தனர்.
இதனால் அவர்கள், போலீஸாரை கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தோம். சமூக விரோதிகளும், தேச விரோத சக்திகளும் திட்டமிட்டே இந்த வன்முறையை தூண்டினர். மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை.
காவல்துறை வாகனங்களுக்கு தீ வைப்பு, அரசு பேருந்து மீது தாக்குதல், காவலர் மீது தாக்குதல், டாஸ்மாக் மதுபானக் கடை மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 40 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வன்முறையில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவான நபர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டு,கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
யாரும் அச்சமடைய தேவையில்லை: சென்னையில் திங்கள்கிழமை மாலை இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற மாவட்டங்களில் இருந்தும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து கூடுதல் காவலர்கள் சென்னை பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர்.
மேலும், செவ்வாய்க்கிழமை காலைக்குள் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பி விடும். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com