வறட்சி: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 10,453 ஏக்கர் பயிர் பாதிப்பு: மத்திய அரசு குழுவினர் தகவல்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வறட்சியால் 10,453 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலத்தில் வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அரசு குழுவினர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலத்தில் வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அரசு குழுவினர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வறட்சியால் 10,453 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் கருகி நாசமடைந்தன. இதையடுத்து அனைத்து மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் வறட்சி பாதித்த மாநிலம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து, வறட்சி பாதிப்புகள் குறித்த அறிக்கையை வழங்கி, நிவாரணத் தொகை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மத்திய அரசுக் குழுவினர் வறட்சி பாதிப்புகள் குறித்து தமிழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட உளுந்தை, முதுகூர் ஆகிய கிராமங்களில் சமூக பாதுகாப்பு ஆணையர் மகேஷ்வரன் தலைமையில், கணேஷ்ராம், ரத்தன் பிரசாத், பால் பாண்டியன் ஆகியோர் கொண்ட மத்திய அரசு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மொத்தம் 6,114.9 ஹெக்டேர் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன. ஆய்வு குறித்து அறிக்கையை தயார் செய்து, மத்திய அரசிடம் வழங்கி விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்வோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வறட்சி தொடர்பான புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும், சிறப்பு விடியோ தொகுப்பையும் பார்வையிட்டனர். பின்னர் வறட்சி பாதித்த நெற் பயிர்கள், நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, எஸ்.பி. சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், திருவள்ளூர் கோட்டாட்சியர் எஸ்.ஜெயச்சந்திரன், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்: இதைத்தொடர்ந்து மகேஷ்வரன் தலைமையிலான மத்திய அரசு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மதுரமங்கலம், கண்ணந்தாங்கல் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சி.என்.நடேஷ்வரன் ஐஏஎஸ் தலைமையில், டாக்டர் கணேஷ்ராம், ரத்னபிரசாத், டாக்டர் பால்பாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர்கள் கூறுகையில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் மொத்தம் 4,338 ஹெக்டேர் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 5,561 சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றனர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், துணை ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com