விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம்

மத்திய அரசின் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளில் தமிழக அரசு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளில் தமிழக அரசு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.
இதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியுள்ளது. திருத்தங்களின் விவரம் வருமாறு:
முதன்மைச் சட்டம் 3-ஆம் பிரிவு: வீடுகளில் பராமரிக்கப்படும் விலங்கினங்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதர்களின் கடமை. அவற்றுக்கு தேவையற்ற வகையில் பாதிப்புகளோ, வேதனைகளையோ அளிக்க்க கூடாது.
தமிழக அரசின் திருத்தம்: மாநில அரசால் இயற்றப்படுகிற விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படுதல் வேண்டும். (சட்டத்தின் 3-ஆவது பிரிவில் விலங்கினங்களுக்கு துன்பம் ஏற்படுத்தக் கூடாது. துன்பம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த திருத்தம் வழிவகை செய்கிறது)
முதன்மைச் சட்டம் 11---3-ஆம் உட்பிரிவில் இ என்ற கூறு: எந்த விலங்கினத்தையும் தேவையற்ற துன்பங்களை ஏற்படுத்தி அவற்றை உணவுக்காவோ வேறு பயன்பாட்டுக்காகவோ கொல்லவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.
தமிழக அரசின் திருத்தம் (இந்த இ உட்பிரிபுவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவு சேர்ப்பு): பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது.
முதன்மைச் சட்டம் 27-ஆவது பிரிவு பி: வனவிலங்கு பூங்காக்கள், சமுதாய அமைப்புகள் அல்லது கூட்டமைப்புகள் தங்களிடம் விலங்கினங்களை வைத்திருக்கலாம். அவ்வாறு வைத்திருந்தால் அவற்றின் முதன்மை நோக்கம் அந்த விலங்கினங்கள் குறித்து கல்வி ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அறிந்து கொள்வதாக இருக்க வேண்டும்.
தமிழக அரசின் திருத்தம் (இந்த பி பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்படுகிறது): சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வு மற்றும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை உறுதி செய்யும் பொருட்டும், பாரம்பரியம்-பண்பாட்டைப் பின்பற்றி முன்னேற்றும் நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுதல் வேண்டும்.
முதன்மைச் சட்டம் 28-ஆம் பிரிவு: எந்த சமுதாயத்திலும் மதத்தின் பெயரால் எந்த மிருகங்களும் பலியிடப்படும் முறையை குற்றம் என்று சட்டம் வரையறுக்கவில்லை.
தமிழக அரசின் திருத்தம் (28-வது பிரிவுக்குப் பிறகு புதியதாக பிரிவு புகுத்தப்படுகிறது) முதன்மைச் சட்டத்தில் அடங்கியிருப்பது எதுவும் பாரம்பரியம்-பண்பாட்டைப் பின்பற்றி-அதனை முன்னேற்றுவதற்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு பொருந்தாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com