ஜல்லிக்கட்டு போராட்ட விஷயத்தில் என்னை கைது செய்யுங்க!: சிம்பு ஆவேச பேட்டி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கைதான மாணவர்கள்  மற்றும் மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; இல்லையென்றால் என்னையும் கைது செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு போராட்ட விஷயத்தில் என்னை கைது செய்யுங்க!: சிம்பு ஆவேச பேட்டி

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கைதான மாணவர்கள்  மற்றும் மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்; இல்லையென்றால் என்னையும் கைது செய்யுங்கள் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சிம்பு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி மெரீனாவில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்யும் அவசர சட்டத்தை அரசு பிறப்பித்தது.

பொதுவாக நம்மால் அரசியல் சட்டங்களை புரிந்துகொள்ள முடியாது. இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் அரசின் சார்பாக யாரவது ஒரு பிரதிநிதி மாணவர்களிடம்  சட்டத்தின் சாராம்சம் குறித்து விளக்கியிருக்கலாம். இது அவர்களுக்கு  தன்னம்பிக்கையை ஏற்படும் வகையில் அமைந்திருக்கும்.

போராட்டம் நடத்திய மாணவர்கள்  கலைந்து செல்வதற்கு காவல்துறை உரிய அவகாசம் அளித்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இந்த போராட்டம் தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி தொடங்கிய போராட்டம் அல்ல. அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் தொடங்கிய போராட்டம். இந்த போராட்டத்திற்கு கண்டிப்பாக ஜாதி, மதசாயம் பூசக்கூடாது.

வன்முறையில் மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுவது முற்றிலும் தவறு. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் அங்குள்ள மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், அவர்களை கைது செய்தது எந்த விதத்தில் நியாயம்? மீனவர்கள் யாரும் அங்கே  வன்முறையில் ஈடுபடவில்லை.

அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.  வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் இந்த போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். எனவே என்னையும் கைது செய்யுங்கள்.  இரண்டாவதாக கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மூன்றாவதாக இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும்.

கைதானவர்களை அரசு விடுவிக்கவில்லையெனில், அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்.

அதேநேரம் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது அரசு எந்த வித நடவடிக்கையம் எடுக்காதது ஏன்?  தற்போது மெரினாவில் 144 தடை உத்தரவு ஏன் போடப்பட்டுள்ளது?

இவ்வாறு சிம்பு தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com