உள்ளாட்சி வரி விதிப்புக்கு எதிர்ப்பு: ஜூலை 3 முதல் திரையரங்குகள் மூடல்

சினிமா துறை மீதான உள்ளாட்சி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் திங்கள்கிழமை (ஜூலை 3) முதல் திரையரங்குகள் மூடப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

சினிமா துறை மீதான உள்ளாட்சி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் திங்கள்கிழமை (ஜூலை 3) முதல் திரையரங்குகள் மூடப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் தமிழக அரசின் உள்ளாட்சி வரி விதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, களஞ்சியம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு பின் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பின் திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வது என்பது குறித்து புதுச்சேரி அரசு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதுபோன்ற தெளிவான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறையில் விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழக அரசு உள்ளாட்சி வரி என்ற முறையில் 30 சதவீதம் விதித்துள்ளது.
ஜி.எஸ்.டி வரியுடன் இந்த வரியும் சேர்ந்து கொண்டால் எங்களால் தொழில் நடத்த முடியாது. மொத்தமாக 66 சதவீதம் வரிவிதிப்புக்கு உள்ளாக வேண்டியுள்ளது. சினிமா தொழில் நலிவடைந்து வரும் நிலையில், அதனை காப்பாற்றுவதற்கு வழி செய்யாமல் இன்னும் அழிவுக்கு நிலைக்குச் கொண்டு செல்லும் வகையில் இந்த வரிவிதிப்பு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, வரும் திங்கள்கிழமை (ஜூலை 3) முதல் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வரை சனிக்கிழமை (ஜூலை 1) சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com