கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் எண்ணெய் கசிவு: பொதுமக்கள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயிலிருந்து வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் எண்ணெய் கசிவு: பொதுமக்கள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயிலிருந்து வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஓஎன்ஜிசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 11 இடங்களில் கச்சா எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு குழாய் மூலம் 7 கி.மீ. தொலைவுள்ள நாகை மாவட்டம் குத்தாலம் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஓஎன்ஜிசி பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது; குடிநீரில் ரசாயன நெடி வீசுகிறது; விவசாய நிலங்கள் பாழாகிறது என கூறி, பொதுமக்கள் ஓஎன்ஜிசி பணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கதிராமங்கலம் வனதுர்க்கையம்மன் கோயில் அருகே உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு பகுதியிலிருந்து குத்தாலத்துக்கு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு, ஸ்ரீராம் என்பவரது வயலில் கச்சா எண்ணெய் பரவியது. இதனால் அச்சமடைந்த கதிராமங்கலம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். கச்சா எண்ணெய் கசிவு குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கிராம மக்கள் கசிவு குழாய் பகுதிக்கு செல்லும் சாலையில் அரண்போல் அமர்ந்தனர். தகவலறிந்து அங்கு வந்த குடந்தை சார் ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட எஸ்.பி. மகேஷ், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட யாரையும் மக்கள் அந்தப் பகுதியில் அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்: விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியுள்ளது. ஓஎன்ஜிசியால் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது நடப்பது என்ன? என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கசிவை தடுக்க வந்தால் அங்கேயே கச்சா எண்ணெயை தீவைத்து தீக்குளிப்போம். தீயில் சேர்ந்து கருகி போவோம் என மிரட்டினர். அப்போது பெண்கள் பலரும் பாட்டில்களில் கச்சா எண்ணெயை பிடித்து வைத்து கொண்டு கூச்சலிட்டனர்.
தொடர்ந்து, திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி. செழியன், முன்னாள் எம்எல்ஏ செ.ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கோ.ரவிச்சந்திரன், கோ.ஆலயமணி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேசினர். மக்களுக்கு பாதிப்பில்லை என கூறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் வந்து உத்தரவாதம் கொடுக்க வேண்டும், விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என கூறினர்.
பின்னர் ஆட்சியர் வரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கூறி வனதுர்க்கையம்மன் கோயில் அருகே உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முன் பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. கதிராமங்கத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு திருவிடைமருதூர், கும்பகோணம் டிஎஸ்பிக்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்
கதிராமங்கலம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை வந்தார். அப்போது அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
ஓஎன்ஜிசி நிறுவனம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்யும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com