திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது 30% கேளிக்கை வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதைக் கண்டித்து இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருகின்றன. ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் படுவதற்கு காரணமான தமிழக அரசின் புதிய வரிவிதிப்புக்கு  கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 35% வரை கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கேளிக்கை வரி தானாகவே செயலிழந்திருக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் ஏற்படும் இழப்பு ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு கிடைக்கும் பங்கிலிருந்து ஈடுகட்டப்படும். இதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆனால், தமிழக அரசு மட்டும் இந்த வரியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இவ்வாறு செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.  கேளிக்கை வரி மூலமான வருமானம் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரம் ஆகும். ஆனால், புதிய வரிவிதிப்பின் மூலம் கேளிக்க வரி ரத்து செய்யப்படும் பட்சத்தில் அதை மாநில அரசு  தான் அதன் நிதி ஆதாரங்களில் இருந்து ஈடு செய்ய வேண்டுமே தவிர கூடுதலாக இன்னொரு வரி விதித்து திரையரங்குகள் மீதும், படம் பார்க்கும் மக்கள் மீதும் தேவையற்ற சுமையை சுமத்தக்கூடாது.

உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாய் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தமிழக அரசு, இதற்கு முன், தமிழில் பெயர் சூட்டப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு இன்று வரை ஈடு செய்யப்படவில்லை. அதேபோல் வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டதன் பயனை படம் பார்ப்பவர்களுக்கு வழங்காமல் திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அனுபவித்த போதும் அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்தது. ஆனால், இப்போது  திரையரங்குகளிடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.டி வரி வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய பங்கை வழங்காமல் இருப்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றுகிறது.

திரைப்படத்துறை என்றாலே அதில் சம்பந்தப்பட்டவர்கள் கோடிகளில் மிதப்பவர்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. ஒரு சில நடிகர்களும், இயக்குனர்களும் மட்டுமே கோடிகளை ஈட்டுகின்றனர். இத்தகையை நடவடிக்கைகள் அவர்களை பாதிக்கப்போவதில்லை. ஆனால், திரைத்துறையில் லட்சக் கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இப்போதே திரையரங்குகளில் வாரஇறுதி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் கூட்டம் வருவதில்லை. புதிய வரி விதிப்பால் திரையரங்குகளும், திரைத்துறையும் பாதிக்கப்பட்டால் கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு  திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இப்போது எழுந்துள்ள சிக்கலுக்கு கேளிக்கை வரி ரத்து மட்டும் தான் தீர்வே தவிர, கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் தீர்வல்ல. அது திரையரங்குகள் மற்றும் திரைத்துறையின் அழிவுக்கு வழி வகுக்கும். எனவே, கேளிக்கை வரி விதிப்பை மட்டும் தான் திரைத்துறையினர் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com