ஜி.எஸ்.டி.யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

ஜி.எஸ்.டி.யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி.யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

ஜி.எஸ்.டி.யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தார். இரண்டாவது நாளான திங்கள்கிழமை, பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் அமைத்துள்ள மக்கள் நல சேவை மையத்தின் மூலம் தொழில் அமைப்பினர் ஜி.எஸ்.டி.க்கு பதிவு செய்யும் நிகழ்ச்சியை அவர் தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, தொழில் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஜி.எஸ்.டி. தொடர்பான கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சரக்கு, சேவை வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது நாட்டின் மாற்றத்தை நோக்கிய முதல் படியாகும். ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதால் ஊழல், பதுக்கல் குறையும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோர், புதிதாகத் தொழில் தொடங்கி நடத்துவதில் முன்பு ஏராளமான இடர்பாடுகள் இருந்தன. மத்திய, மாநில அரசுகளுக்குத் தனித்தனியாக வரி படிவங்களை சமர்ப்பிப்பது போன்ற சிக்கலான நடைமுறைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
ஆனால், ஜி.எஸ்.டி. அமலாகி இருப்பதால் தொழில் முனைவோர் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் ஜி.எஸ்.டி.யை வரவேற்பதுடன், அமல்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களிடம் ஜி.எஸ்.டி. குறித்த புரிதல் இல்லாததால்தான் எதிர்மறை கருத்துகள் உலவுகின்றன. அவர்களும் போகப்போகத் தெரிந்து கொள்வார்கள். புதிய வரி விதிப்பால் விலைவாசி உயராது. மாறாக வெகுவாக குறையும்.
இந்தியா தற்போது வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த வரி விதிப்பு மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அதன் மூலம் கல்வி, சுகாதாரம், உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய வசதிகளை ஏற்படுத்தவும் முடியும்.
ஜி.எஸ்.டி.யால் ரயில்வே துறையில் எந்த மாற்றமும் இருக்காது. பெட்ரோல், டீசலுக்கும் ஜி.எஸ்.டி. விதிப்பது குறித்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள கவுன்சில்தான் முடிவு செய்ய முடியும். புதிய வரி விதிப்பு உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு உதவும். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) தற்போது ஆண்டுக்கு சுமார் ரூ.130 லட்சம் கோடியாக உள்ளது. ஜி.எஸ்.டி. காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் இது சுமார் ரூ. 650 லட்சம் கோடியாக உயரும். இதில் ரூ.130 லட்சம் கோடி வரியால் மட்டுமே ஈட்டப்பட்டதாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com