சென்னையில் எம்டிசி கேன்டீன்களுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமமே இல்லை: ஆய்வில் 'பகீர்' தகவல்

மாநில அரசுக்கு சொந்தமான மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் கேன்டீன்கள் உணவுப் பாதுகாப்பு உரிமமே இல்லாமல் இயங்கி வரும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் எம்டிசி கேன்டீன்களுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமமே இல்லை: ஆய்வில் 'பகீர்' தகவல்


சென்னை: மாநில அரசுக்கு சொந்தமான மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் கேன்டீன்கள் உணவுப் பாதுகாப்பு உரிமமே இல்லாமல் இயங்கி வரும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கேன்டீன்களுக்கு, உணவகங்கள் பெற வேண்டிய பதிவுச் சான்றிதழும் பெறப்படவில்லை என்பதுதான் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட 24,300 பணியாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் கேன்டீன்களில் தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரினை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் கே. அன்பழகன் கூறுகையில், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மே 24ம் தேதி அளித்த புகாரில், எம்டிசி கேன்டீனில் உணவு சாப்பிடம் ஊழியர்கள் பலருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஆர். கதிரவன் தலைமையில் 7 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, கடந்த ஜூன் 19ம் தேதி சென்னையில் உள்ள 20 கேன்டீன்களிலும் சோதனை நடத்தியது.

அதில், மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தால் பேருந்து நிலைய பணிமனைகளில் நடத்தப்படும் அனைத்து கேன்டீன்களுமே, உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமலும், உணவகத்துக்கான பதிவு சான்றிதழ் பெறாமலும் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது என்று புகார் மீது கதிரவன் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்துக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள அறிவுறுத்தல் கடிதத்தில், மாநகராட்சி போக்குவரத்துக் கழக கேன்டீன்களில் தயாரிக்கப்படும் உணவு போதிய சுகாதாரத்துடன் தயாரிக்கப்படுவதில்லை என்றும், சுத்தமற்ற சமையலறை, சுகாதாரமற்ற குடிநீர், சமையல் செய்யும் நபர்களின் தூய்மையற்ற நிலை போன்றவற்றை மாற்றும்படியும், அழுகிய காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தும்படியும் கூறியுள்ளது.

அதோடு, மாநகராட்சி போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு குறிப்பிட்டது போல 600 கிராம் சாப்பாடு வழங்கப்படுவதில்லை என்றும், அதைக் கேட்கும் ஊழியர்களை கேன்டீன் தொழிலாளர்கள் அசிங்கமாகத் திட்டுவதாகவும் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கேன்டீன்களுக்கு உரிமம் பெறப்படவில்லை என்றால், அதன் வருமானம் யாருக்குச் செல்கிறது? என்றும் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து கேன்டீன் ஒப்பந்ததாரர்களும் உடனடியாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பிக்குமாறு மாநகராட்சி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com