மணல் லாரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்

சென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 6) நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மணல் லாரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள்

சென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 6) நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மணல் லாரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
மணல் தட்டுப்பாட்டைப் போக்கவும், கட்டுமானத் துறையில் உள்ள சில குறைபாடுகளைக் களைய வலியுறுத்தியும் அனைத்து கட்டுமானத் துறையினரும் சென்னையில் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
அதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்துடன் சேர்ந்து, சிலர் மணல் லாரி உரிமையாளர் சங்கம் என்ற பெயரில் மணல் லாரிகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என அறிவித்துள்ளனர். அதற்கு மாநில சம்மேளனம் உடன்படவில்லை.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வழக்கம் போல் மணல் லாரிகள் இயங்கும். ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் மூலம் தினமும் 4,000 முதல் 5,000 லோடுகள்தான் மணல் கொடுக்கின்றனர்.
ஒரு லட்சம் லாரிகள் இயங்கும் நிலையில் 95 ஆயிரம் லாரிகள் வேலைவாய்ப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன. வங்கி வரைவோலைக்கு மணல் வழங்க வேண்டும். ஸ்வைப்பிங் இயந்திரம் மூலம் பண அட்டை மற்றும் கடன் அட்டையைப் பயன்படுத்தி மணல் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் முறையில் பதிவு செய்து மணல் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தியதை வரவேற்கிறோம். ஆனால், கடந்த நான்கு நாள்களாக ஆன்லைனில் பதிவு மட்டும் நடைபெற்று வருகிறது. பதிவு செய்த லாரிகளுக்கு மணல் வழங்கவில்லை. ஆளுங்கட்சியினர், பொதுப்பணித் துறையினர் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பெற்றுக் கொண்டு தான் மணல் அள்ள அனுமதிக்கின்றனர். தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி தினமும் ஒரு லாரிக்கு ஒரு லோடு மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்கிட பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க கடந்த 2003- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆற்றுப்படுகையில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள மணலை நில உரிமையாளர்களே எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம்.
தேவைப்பட்டால் தமிழக அரசு இதற்கு காப்புரிமை தொகையை வசூல் செய்து கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 24 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. தமிழகத்துக்கு தினமும் 30,000 லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 5,000 லோடுக்கு குறைவாக தான் கிடைக்கிறது, எனவே, இந்த அளவை அதிகப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com