கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் அனைவரும் கைது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் அனைவரும் கைது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: கொடநாடு எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபா காயங்களுடன் ஏப்ரல் 24-இல் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் வாக்குமூலம் பெற்றார்.
ஏப்ரல் 23-இல் கொடநாடு எஸ்டேட் வாயில் எண் 8-இல் கிருஷ்ணதாபா பணியில் இருந்தபோது, அங்கு வந்த சிலர் அவரைத் தாக்கி கை கால்களைக் கட்டி லாரியில் போட்டுள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் அவரைப் பார்த்துக்கொள்ள மற்றவர்கள் எஸ்டேட்டினுள் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பியவர்கள் அவரிடமிருந்து செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
பிறகு கிருஷ்ண தாபா கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு வாயில் எண் 10-க்குப் போனபோது ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளார். பங்களாவின் ஜன்னல் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு சிலர் உள்ளே சென்றதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 24-இல் தனிப்படை காவலர்கள் கூடலூர் அருகே சென்ற இரண்டு கார்களை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்து அனுப்பினர்.
தனிப்படையினர் விசாரணையில் கோத்தகிரி முதல் கூடலூர் வரையில் உள்ள கண்காணிப்புக்கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கைபேசி கோபுரங்களில் பதிவான அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ததில் மேற்கண்ட இரண்டு வாகனங்களும் கொடநாட்டுக்குச் சென்று வந்தது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி, தீபு, சதீஷன், உதயகுமார் ஆகிய நால்வரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி இந்தச் சம்பவத்தில் 11 நபர்கள் 3 வாகனங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் கார் ஓட்டுராகப் பணிபுரிந்த எடப்பாடி கனகராஜ் இந்தக் கூட்டுக் கொள்ளையில் சதித் திட்டம் தீட்டி, தனக்குத் தெரிந்த கோயம்புத்தூர் ஜெயா பேக்கரியில் மேலாளராகப்பணிபுரிந்து வந்த கேரளத்தைச் சேர்ந்த சயனிடம் தெரிவித்து, அவர்களின் ஆள்களுடன் சென்று இந்தச் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். எஸ்டேட்டில் விலையுயர்ந்த பொருள்கள், பணம் கிடைக்காததால் அங்கிருந்த அலங்காரப் பொருள்கள் மற்றும் கைகடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் ஏப்ரல் 28-இல் சேலம் ஆத்தூர் அருகே காரில் சென்றபோது விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயன் தனது மனைவி விஷ்ணுபிரியா மகள் நீத்துவுடன் பாலக்காடு அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி சயனின் மனைவி, மகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சயன் அனுமதிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com