பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா?

நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியில் பெட்ரோலியப் பொருள்கள் கொண்டு வரப்பட்டால் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா?

நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியில் பெட்ரோலியப் பொருள்கள் கொண்டு வரப்பட்டால் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, வீட்டு உபயோகப் பொருள்களின் விலை குறைவதோடு பொதுமக்களும் பெரிதும் பயனடைவர்.
நாடு முழுவதிலும் சரக்கு, சேவை வரி ஒரே விகிதத்தில் இருக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியானது கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பொருளை ஒரே மாதிரியான விலையில் வாங்க முடியும்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சரக்கு, சேவை வரியானது பெட்ரோல், டீசல் மீது கொண்டு வரப்படவில்லை. பெரும்பாலான மாநில அரசுகள் தங்களுக்கு கிடைத்து வரும் வருவாயை இழக்க நேரிடும் என்பதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தற்போது வரையில் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு 23 சதவீதமும், மாநில அரசுகள் 34 சதவீதம் என 57 சதவீத வரி வசூலிக்கப்படுகின்றது.
இவை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வரப்பட்டால் அதிகபட்சமாக 28 சதவீத வரி மட்டுமே வசூலிக்க முடியும்.
ஜிஎஸ்டி வரி மூலம் மாநில அரசுக்கு பல்வேறு பொருள்களில் கூடுதல் வருவாய் கிடைப்பதைக் கொண்டு, பெட்ரோல், டீசல் மீதான வருவாய் இழப்பை ஈடுசெய்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 47.67ஆக குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் தடுமாற்றத்தில் இருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் காப்பாற்றப்படுவதோடு, காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் குறையும்.
கர்நாடகத்தில் பெட்ரோல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படாத நிலையில் மாநில அரசால் வசூலிக்கப்படும் வரி குறைக்கப்பட்டதன் பயனாக அந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரையில் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டி.விஜய கோவிந்தராஜன் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில அரசுக்கு கூடுதல் வருவாய்க் கிடைக்க வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இதுதொடர்பாக மாநில நிதியமைச்சரை விரைவில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றார்.
பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில், தனியார் பெட்ரோல் விற்பனை முகவர்கள் எதிர்ப்பதாகக் கூறப்படுவது குறித்து அந்தச் சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் குறைந்தபட்சம் 5,000 லிட்டர் பெட்ரோல், டீசல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டால் இருப்பு வைக்கப்பட்டதில் இழப்பு ஏற்படும்.
ஆனால், விலைவாசி குறையும் என்ற நோக்கில் ஒரே சீரான வரி விதிப்பு முறை மாநில அரசால் கொண்டு வரப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com