பேரவை இருக்கைகளில் அதிகாரிகள் எங்கே?: துரைமுருகன் கேள்வி

சட்டப் பேரவையில் கேள்வி நேரம், விவாதம் என இருவேறு தருணங்களில் பேரவையில் துறை அதிகாரிகள் இல்லாததை
பேரவை இருக்கைகளில் அதிகாரிகள் எங்கே?: துரைமுருகன் கேள்வி

சட்டப் பேரவையில் கேள்வி நேரம், விவாதம் என இருவேறு தருணங்களில் பேரவையில் துறை அதிகாரிகள் இல்லாததை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக் காட்டியதை அடுத்து உடனடியாக அதிகாரிகள் பேரவையில் வந்து அமர்ந்தனர்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார். அப்போது, பேரவையில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புவார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மூலமாக அரசு மேற்கொள்ளும்.
ஆனால், பேரவையில் அதிகாரிகளுக்கான இருக்கைகளில் அவர்கள் யாருமே இல்லை. அந்த இருக்கைகளில் அவர்கள் அமர வேண்டும். ஏற்கெனவே இதனை அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
இதைத் தொடர்ந்து, காவல்துறை மானியக் கோரிக்கை மீது பேசுவதற்கு முன்பாகவும் துரைமுருகன் இந்தப் பிரச்னையை எழுப்பினார். முதல்வர் முதல் முறையாக போலீஸ் மானியத்தை தாக்கல் செய்திருப்பதாகவும், தானும் நீண்ட காலத்துக்குப் பிறகு அந்தத் துறை விவாதத்தில் பங்கேற்றிருப்பதாகவும் கூறிய அவர், இதனைக் குறிப்பெடுக்க வேண்டிய அதிகாரிகள் இருக்கைகளில் இல்லை. டிஜிபி, போலீஸ் கமிஷனர் ஆகியோர் இருக்கைகளில் வந்து அமர்ந்தால்தான் பேசுவேன் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
அப்போது அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், அதிகாரிகள் பேரவை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அமர்ந்து விவாதங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அமைச்சர் தங்கமணி, விவாதத்தைத் தொடங்கும் போதே உறுப்பினர் துரைமுருகன் ஒரு முடிவோடு ஆரம்பித்துள்ளார். டிஜிபி போன்றோர் வந்துதான் விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை.
உரிய பதிலைக் கொடுக்க அமைச்சர்களும், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் போன்ற உயரதிகாரிகளும் உள்ளனர் என்றார்.
இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, அவையின் மூத்த உறுப்பினராகவும், நீண்டகால அமைச்சராகவும் இருந்த துரைமுருகன் தனது ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அவரது இந்த கருத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் விவாதத்தில் பங்கேற்று தனது பேச்சைத் தொடர்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com