மனித உரிமைகளை மீறுவதுதான் சட்டம் ஒழுங்கை காப்பதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

மனித உரிமைகளை மீறுவதும், மக்களை அடிப்பதும்தான் சட்டம் ஒழுங்கைக் காக்கும் ஜனநாயகமா என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
மனித உரிமைகளை மீறுவதுதான் சட்டம் ஒழுங்கை காப்பதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

மனித உரிமைகளை மீறுவதும், மக்களை அடிப்பதும்தான் சட்டம் ஒழுங்கைக் காக்கும் ஜனநாயகமா என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது :
ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் சுமூகமாக கலைக்கப்பட்டன என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை, போலீசாரே ஆட்டோக்களுக்கு தீவைத்த சம்பவங்களை எல்லாம் நீங்கள் மறைத்திருக்கிறீர்கள்.
வன்முறை நடந்த காரணத்தால்தான், முதல்வரே உத்தரவிட்டு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் இதற்காக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அதுபற்றி எதுவுமே இந்த கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லை என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது : விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை மேற்கொண்டார். அந்த விசராணை முடிந்து அறிக்கை கிடைத்த பிறகுதான் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.
மு.க.ஸ்டாலின் : விசாரணை நடைபெறுகிறது என்ற வார்த்தையாவது அதில் இடம்பெற்றிருக்கலாம். சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறையினரே மாணவர்களின் கையை உடைக்கும் காட்சிகள் வந்துள்ளன.
மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏற்றிய காரணத்துக்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கதிராமங்கலம் கிராமத்தில் போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மனித உரிமைகளை மீறுவதும், மக்களை அடிப்பதும்தான் சட்டம் -  ஒழுங்கைக் காக்கும் ஜனநாயகமா?
முதல்வர் : கதிராமங்கலம் பிரச்னை குறித்து ஏற்கெனவே கூறிவிட்டேன். ஓஎன்ஜிசி குழாய் பதிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக திட்டம் நடைபெற்று வருகிறது. அந்தக் குழாய் இப்போது பழுதடைந்துள்ளது. அதைச் சீர்செய்கிறார்கள். அதில் என்ன தவறு? சிலர் திட்டமிட்டு தூண்டிவிட்டு, அரசுக்கு அவப்பெயர் வர வேண்டும் என்பதற்காக இப்படிப் போராட்டம் நடத்துகின்றனர்.
மு.க.ஸ்டாலின் : இப்படிச் சீர்படுத்துவதை நாங்கள் குறை சொல்லவில்லை. அப்படிச் சீர்படுத்தும் குழாய் பழுதாகி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை வந்த காரணத்தால்தான் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்காக மக்களை அடிப்பது தொடர்ந்து நடக்கிறது.
2016 - ஆம் ஆண்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் இந்திய தண்டனைச் சட்ட குற்றங்கள் 1,87,558 ஆகும். தென்மாநிலங்களில் அரிய குற்றங்கள் நடப்பதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. அகில இந்திய அளவில் நடக்கும் குற்றங்களில் சராசரியாக தமிழகத்தில் 27.2 சதவீத அளவில் குற்றங்கள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான 5,847 குற்றங்கள் நடந்துள்ளன.
முதல்வர் : 2010 - இல் திமுக ஆட்சியில் 1,815 கொலைகள் நடந்துள்ளன. ஆனால், 2016 - ஆம் ஆண்டில் 1511 கொலைகள் நடந்துள்ளதை ஒப்பிடும்போது குற்றங்கள் குறைந்துள்ளன.
மு.க.ஸ்டாலின் : தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தந்துள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ளேன்.
முதல்வர் : அதைத்தான் நானும் கூறுகிறேன். திமுக ஆட்சியைவிட குறைவாக குற்றங்கள் நடந்துள்ளன.
மு.க.ஸ்டாலின் : முதல்வர் புரிந்துகொண்டு பேசுகிறாரா எனத் தெரியவில்லை.
முதல்வர் : புரிந்துதான் பேசுகிறேன். திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களைக் குறிப்பிடுகிறேன் என்றால், இந்திய அளவிலும் திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்கள் அதிகம் என்றுதானே அர்த்தம்.
மு.க.ஸ்டாலின் : தமிழக அரசு முழு புள்ளிவிவரங்களையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துக்குக் கொடுக்கவில்லை.
இந்த அரசுக்கு கோரிக்கை சார்ந்த ஒரு சவால். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் ஒரு பெட்டி வைக்க வேண்டும். புகார் கொடுத்தும் பதிவு செய்யாதது குறித்த தகவலை அந்தப் பெட்டியில் போடச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்பர். இந்த ஆட்சியில் புகார்கள் பதிவு செய்யும் முறை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது அதன் மூலம் தெரிய வரும்.
முதல்வர் : இது விஞ்ஞான உலகம். படித்தவர்களை அதிக அளவில் கொண்ட மாநிலம் தமிழகம். எனவே புகார் கொடுப்பது என்பதெல்லாம் இப்போதைய இளைஞர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மு.க.ஸ்டாலின் : முன்பெல்லாம் அமைச்சர்கள் மீது புகார் அளிப்பர். இப்போது முதல்வர் உள்ளிட்டவர்கள் மீதே புகார் பதிவு செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. 3 அமைச்சர்கள் மீது வழக்கு போடுங்கள் என்று கூறியுள்ளது.
முதல்வர் : வருமான வரித்துறை என்ன கைப்பற்றியது என்பதெல்லாம் வழக்கில் இருக்கிறது. ஒரு தாளை வைத்துக் கொண்டு ஒரு குற்றத்தை ஒருவர் மீது சுமத்த முடியாது. அரசியலில் இருப்பவர்களை ஒரு தாளை எழுதி வைத்துவிட்டு , அதுதான் ஆதாரம் என்றால் ஏற்க முடியாது என உச்ச நீதமன்றம் கூறியுள்ளது.
மு.க.ஸ்டாலின் : வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் வருமான வரி துறை எங்கு வருகிறது?சட்டத்தின் ஆட்சி அமைச்சருக்குப் பொருந்தாதா என்று கேள்வி உச்ச நீதிமன்றம் எழுப்பி அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com