நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பினார் புதுவை பேரவைத் தலைவர்

நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பினார் புதுவை பேரவைத் தலைவர்

புதுவையில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்பை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் நிராகரித்து திருப்பி அனுப்பினார்.

புதுவையில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்பை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் நிராகரித்து திருப்பி அனுப்பினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுடன், அரசுக்கு ஆலோசனை வழங்க 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் நியமித்துக் கொள்ளலாம். இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கும். தலைமைச் செயலர் அதை மாநில அரசிதழில் வெளியிடச் செய்வார். அதன்பிறகு, சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
ஆனால், தற்போது மாநில அரசின் பரிந்துரையில்லாததுடன், குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறாமலேயே மத்திய உள்துறை அமைச்சகமே நேரிடையாக பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளதாக, புதுச்சேரி தலைமைச் செயலருக்கு அறிவிப்பு அனுப்பியது.
பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் அவர்கள் நேரில் சென்று தங்களது நியமனம் தொடர்பாகத் தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு, இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியாகட்டும் என பேரவைத் தலைவர் பதில் கூறியிருந்தார். இதற்கிடையே, நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக லட்சுமிநாராயணன் எம்எல்ஏ தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்ததால் கிரண் பேடி, ஆளுநர் மாளிகையில் கடந்த 4- ஆம் தேதி நியமன எம்எல்ஏக்களுக்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, அவர்கள் தங்களுக்கு பேரவையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள இடமும், உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டையும் வழங்க வேண்டும் எனக் கோரி பேரவைச் செயலரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே, ஆளுநர் செயலகத்தில் இருந்து 3 நியமன எம்.எல்.ஏக்கள் பதவிப் பிரமாணம் தொடர்பான கோப்பு பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்காமல் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அந்தக் கோப்பை திருப்பி அனுப்பி விட்டார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறியதாவது:
நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக முறையான தகவல் எதுவும் பேரவைத் தலைவருக்கு வரவில்லை. சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட பேரவைத் தலைவர் இருக்கிறார். மேலும், அவர் உள்துறை அமைச்சகம் நியமித்ததாக வந்த மூன்று பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுக்கவில்லை; ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தினார்.
எனவே, ஆளுநர் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது. எனவே, அவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாகக் கருத முடியாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநரால் நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்களை ஏற்க முடியாது என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்து இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com