மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கிரண் பேடி வலியுறுத்தல்

நியமன எம்.எல்.ஏ.க்கள் கோப்பை ஏற்க பேரவைத் தலைவர் மறுத்துள்ளதால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கிரண் பேடி வலியுறுத்தல்

நியமன எம்.எல்.ஏ.க்கள் கோப்பை ஏற்க பேரவைத் தலைவர் மறுத்துள்ளதால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் யூனியன் பிரதேச சட்டப் பிரிவு 3 (3)- இன் படி தனக்குள்ள அதிகாரத்தின்படி மத்திய அரசு புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய அரசு அனுப்பியது. அதைப் பெற்று தலைமைச் செயலாளர் அரசிதழில் வெளியிட்டார். அதன் பின்னர், 3 பேரும் பேரவைத் தலைவரிடம் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரினர். ஆனால், இதையறிந்த பேரவைத் தலைவர் அவர்களுக்கு பதவி பிரமாணம் தொடர்பான நேரம், தேதியைக் கூடத் தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக அவர்கள் 3 பேரும் எழுத்து மூலமாக புகார் தெரிவித்து, தங்களுக்கு பதவி பிரமாணம் செய் யும்படி கோரினர். யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி என்ற முறையில் நான் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன். யூனியன் பிரதேச சட்டம் பிரிவு 11- இன் கீழ் இது மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பான முறையான தகவல் மத்திய அரசுக்கும், பேரவைத் தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் பேரவைத் தலைவர் அலுவலகம் திருப்பி அனுப்பி உள்ளது. நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக முறையான தகவல் தெரிவிக்கவில்லை எனக் காரணம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் செயலகம் அனுப்பிய கோப்பை ஏற்கத் தேவையில்லை என அனுப்பி விட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மத்திய அரசு நியமித்து, புதுவை அரசு இதை அரசிதழில் வெளியிட்டு, பேரவைத் தலைவருக்கும் தகவல் தரப்பட்டதே உண்மை என்றார் கிரண் பேடி.
ஆளுநர் செயலகத்துக்கு இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலர் அனுப்பிய கடிதத்தையும் அவர் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com