தமிழகத்தில் ரூ.1000 கோடி தடுப்பணைத் திட்டங்கள்: குமரியில் முடங்கிய தடுப்பணைப் பணிகள் உயிர்பெறுமா?

தமிழகத்தில் வரும் 3 ஆண்டுகளில் ரூ. 1000 கோடியில் தடுப்பணை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில்,
தமிழகத்தில் ரூ.1000 கோடி தடுப்பணைத் திட்டங்கள்: குமரியில் முடங்கிய தடுப்பணைப் பணிகள் உயிர்பெறுமா?

தமிழகத்தில் வரும் 3 ஆண்டுகளில் ரூ. 1000 கோடியில் தடுப்பணை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் முடங்கிக் கிடக்கும் தடுப்பணைத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தற்போது கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.  கடந்த ஆண்டு அக்டோபர்,  நவம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் கும்பப்பூ நடவு செய்திருந்த விவசாயிகளில் பெரும்பாலானோர் வைக்கோல்களை மட்டுமே அறுக்கும் நிலை ஏற்பட்டதோடு,  ஆயிரக்கணக்கில் தென்னை மற்றும் வாழை மரங்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டது.

அணைகள்,  குளங்கள்,  கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டதால் மக்கள் குடிநீருக்கும் கூட கடும் அவதிப்பட்டனர்.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை வறண்டதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளிலிருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையைப் போல்  ஜூன் முதல் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழையும் தீவிரமாகப் பெய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.  

விவசாயிகள் எதிர்ப்பு: மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு கூடுதல் குடிநீர்த் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்  பெருஞ்சாணி அணையிலிருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் எடுக்கும் திட்டம்,  களியல் அருகே கோதையாற்றிலிருந்து அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பெருஞ்சாணி அணையிலிருந்து நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் எடுப்பதற்கு விவசாயிகளும்,  களியல் ஆற்றிலிருந்து அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தண்ணீர் எடுப்பதற்கு  திற்பரப்பு,  கடையல் பகுதி மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதில், அழகியபாண்டிய புரம் குடிநீர்த் திட்டத்துக்கு களியல் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு,  அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.

செயல்வடிவம் பெறாத தடுப்பணைத் திட்டங்கள்: மாவட்டத்தில் மழைக் காலங்களில் ஆறுகள் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி பாசனத்துக்கும்,  குடிநீருக்கும் பயன்படுத்த பல தடுப்பணைத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக செயல்வடிவம் பெறாமல் முடங்கிக் கிடக்கின்றன.

குறிப்பாக  10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நந்தியாறு திட்டம், முட்டச்சிக்காயல் திட்டம்,  உள்ளிமலை திட்டம், முல்லையாறு திட்டம்,  வள்ளியாறு திட்டம் உள்ளிட்ட தடுப்பணைத் திட்டங்கள் செயல்வடிவம் பெறாமல் முடங்கியுள்ளன.

இதில்,  நந்தியாறு திட்டத்தில் திருநந்திக்கரைக்கு மேல்பகுதியில் அணை கட்டுவதற்கு முதல்நிலை மதிப்பீடாக ரூ. 3.60 கோடி,  உள்ளிமலை திட்டத்தில் சுருளகோடு பகுதியில் உள்ளிமலை ஓடையின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதல்நிலை மதிப்பீடாக ரூ. 5.35 கோடி,  முட்டச்சிக்காயல் திட்டத்தில் சுருளகோடு கிராமம் புரவூர் முட்டச்சிக்காயல் பகுதியில் அணை கட்டுவதற்கு முதல்நிலை மதிப்பீடாக ரூ. 7.5 கோடி என கணக்கிடப்பட்டது.

முல்லையாறு திட்டத்துக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உலக்கை அருவித் திட்டமும், கோதையாற்றின் குறுக்கே அம்பாடி அருகிலுள்ள வண்ணான்பாறை கல்லணையை சீரமைத்து தண்ணீரைத் தேக்கும்  திட்டமும் கிடப்பில் உள்ளன. குழித்துறை  தாமிரவருணியாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தில் போதிய முன்னேற்றம் இல்லை.

கிடப்பில் கிடக்கும் திட்டங்களை நிறைவேற்றினாலே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளின்றி கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் எடுக்கலாம் என சமூக நல ஆர்வலர்களும்,  முன்னோடி விவசாயிகளும் கூறுகின்றனர்.

இதுகுறித்து முன்னோடி விவசாயி பி. ஹென்றி  கூறியது:
மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி குடிநீர்த் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.  மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவிவரும் நிலையில், முடங்கிக் கிடக்கும் தடுப்பணைத் திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து,  மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதீன் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரங்களை பெருக்கும் வகையில்  புதிய தடுப்பணைகளைக் கட்டுவது தொடர்பாக பொதுப்பணித்துறை , வேளாண் பொறியியல் துறை,   ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டவை  சார்பில் கருத்துருக்கள்  அரசின் பார்வைக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 

சட்டப்பேரவையில் முதல்வர்அறிவித்துள்ள தடுப்பணைகள் கட்டும் திட்டம் தொடர்பான அரசாணைகள்  சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விரைவில் வரும். அப்போது குமரி மாவட்டத்தில்  எந்தெந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தெரியவரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com