ஜிஎஸ்டி: அதிமுக உறுப்பினரின் எதிர்ப்பால் அமைச்சர்கள் தவிப்பு

ஜிஎஸ்டி அமல்படுத்தியதற்கு அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து பேரவையில் புதன்கிழமை விவாதம்
ஜிஎஸ்டி: அதிமுக உறுப்பினரின் எதிர்ப்பால் அமைச்சர்கள் தவிப்பு

ஜிஎஸ்டி அமல்படுத்தியதற்கு அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது.
வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செந்தில்பாலாஜி பேசும்போது, சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியால் ஜவுளித் தொழில், பட்டாசு தொழில் போன்றவை பெரும் பாதிப்புக்குள்ளாகும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.
இதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படாமல் இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசியது:
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜிஎஸ்டி வரியின் மூலம் ஜவுளி தொழில் எப்படிப் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் வெளுத்து வாங்குகிறார். ஆனால், அமைச்சர் பதில் அளிக்காமல் அமர்ந்துள்ளார். அதிமுக உறுப்பினருக்குப் பதில் அளிக்க அமைச்சருக்கு தைரியம் இல்லையாய வாய்ப்பு இல்லையா என்று கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் கே.சி.வீரமணி: அதிமுக உறுப்பினர் அரசின் நடவடிக்கை குறித்து ஆதரவாகப் பேசுவார் என்றுதான் அமர்ந்திருந்தேன். அதிமுக உறுப்பினர் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய மாதம்தோறும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.
பேரவைத் தலைவர் தனபால்: அதிமுக உறுப்பினர் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை. குறைபாடுகளைத்தான் தெரிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன்: மக்களின் உணர்வுகளைத்தான் அதிமுக உறுப்பினர் தெரிவித்தார். அதை வெளுத்து வாங்கியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜிஎஸ்டியைக் குறைக்க தில்லியில் எப்படி நாங்கள் பணியாற்றுகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.
செந்தில்பாலாஜி: கடலை மிட்டாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. உரத்துக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் ஜிஎஸ்டியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். எனவே, ஜெயலலிதாவின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.சி.வீரமணி: ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதை 26 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி ஜிஎஸ்டியை எதிர்த்தார். ஆனால், அவர் பிரதமராகப் பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியுள்ளார். அதிமுக அரசு சுட்டிக்காட்டிய திருத்தங்களும் ஏற்கப்பட்டுத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உறுப்பினர்கள் சுட்டிக் காட்டும் பிரச்னைகளும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.
கே.ஆர்.ராமசாமி (பேரவை காங்கிரஸ் தலைவர்): ஜிஎஸ்டியை அரசு முழுமையாக ஏற்கிறதா இல்லையா என்பதை அமைச்சர் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், ஜிஎஸ்டியால் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட முடியாத அளவுக்கு விலை உள்ளது.
கே.சி.வீரமணி: ஜிஎஸ்டியை முதலில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான். அப்போது, நாங்கள் முழுமையாக எதிர்த்தோம். திமுக ஆதரவு தெரிவித்தது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை முழுமையாக நாங்கள் ஏற்கவில்லை. சில பொருள்களுக்கான விலையைக் குறைப்பதற்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: ஜிஎஸ்டியை அரசு ஏற்கிறதா என்று காங்கிரஸ் உறுப்பினர் கேட்கிறார். அந்த வரியை ஏற்கிறோம் என்றுதான் கூறுகிறோம். எல்லா மாநிலங்களிலும் ஏற்றுக்கொண்ட பிறகு தமிழக அரசு ஏற்காவிட்டாலும் பயன் எதுவும் இல்லை. மதிப்புக்கூட்டு வரி விதிப்பும் முடிவுக்கு வந்துவிட்ட பிறகு தமிழக அரசால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com