ஜிஎஸ்டி பதிவு செய்த வணிகர்களுக்கு மேலும் சுமை?

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்த வணிகர்களுக்கு தற்போதைய விதிமுறைகளின் படி வரி செலுத்தினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பதிவு செய்யாத வணிகர்களிடம் இருந்து
ஜிஎஸ்டி பதிவு செய்த வணிகர்களுக்கு மேலும் சுமை?

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்த வணிகர்களுக்கு தற்போதைய விதிமுறைகளின் படி வரி செலுத்தினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பதிவு செய்யாத வணிகர்களிடம் இருந்து அரசே நேரடியாக வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) ஜூலை 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. தொழில் முனைவோர், வணிகர்களிடம் கலந்தாலோசிக்காமல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த வணிகர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, பதிவு செய்யாத வணிகர்களிடம் இருந்து சரக்கு அல்லது சேவையை பெறும் பதிவு செய்த வணிகர்கள் தான் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்ற விதி ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்குள் வணிகம் செய்பவர்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்யாத மற்றும் ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்குள் வணிகம் செய்பவர்களிடம் சரக்கு அல்லது சேவையை பெறும் பதிவு செய்த வணிகர்கள், அதற்கான வரியை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழில் செய்வதற்கான மூலப் பொருள்கள், தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே பதிவு செய்த வணிகரிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியும். மற்ற பொருள்கள் சிறு வணிகர்கள், பதிவு செய்யாத வணிகர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
அதாவது கட்டடத்தை வாடகைக்கு விடுபவர்கள் பெரும்பாலும் பதிவு செய்ய மாட்டார்கள். கட்டடத்தை வாடகைக்கு பயன்படுத்துவோர் அவர்களுக்கு செலுத்தும் வாடகைக்கு வரிப் பிடித்தம் செய்ய முடியாது. ஆனால் பதிவு செய்த வணிகர் கட்டட வாடகைக்கு ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும்.
அதேபோல கமிஷன் பணம், எழுது பொருள்கள், தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் பழுதுபார்த்தல், பராமரித்தல், அலுவலகப் பராமரிப்பு, வாகனப் பராமரிப்பு, கணினி பராமரிப்பு, சட்ட கட்டணங்கள், ஆலோசனைக் கட்டணம், தொழில் கட்டணம், தணிக்கைக் கட்டணம், லேபர் சார்ஜ், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிக்கான வாடகைக் கட்டணம், பரிசுப் பொருள்களுக்கான செலவு, வணிகத்தை மேம்படுத்துவதற்கு செலவிடும் கட்டணம், விளம்பரக் கட்டணம் என பல்வேறு சேவை மற்றும் சரக்குகளை பதிவு செய்யாத வணிகர்களிடம் இருந்து பெறும்போது அதற்கான வரியை 'ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்' என்ற முறையில் அந்த சேவை மற்றும் சரக்கை பெறும் பதிவு செய்த வணிகர்கள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தும் குறிப்பிட்ட சில வரிகளை, தாங்கள் செய்த விற்பனைக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக் கொண்டு அரசுக்குச் செலுத்தலாம். ஆனால் லாரி வாடகை போன்ற சில செலவுகளுக்கான ஜிஎஸ்டி வரியை விற்பனைக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழிக்க முடியாது. அத்தகைய நேரத்தில் பதிவு செய்த வணிகர்களுக்கு கூடுதல் வரிச்சுமையும், நிதிச்சுமையும் ஏற்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்யாத வணிகர்களிடமிருந்து நாளொன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வரையில் சரக்கு அல்லது சேவையை பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பிலான சேவை அல்லது சரக்கை பதிவு செய்யாத வணிகர்களிடமிருந்து பெறும்போது கட்டாயமாக பதிவு செய்த வணிகர் அதற்கான வரியை ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் முறையில் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களின் கோரிக்கை: ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கும் கீழ் வணிகம் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியதில்லை. வரியையும் வசூலிக்க வேண்டியதில்லை. இது ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இவர்கள் செய்யும் வியாபாரத்துக்கு சரக்கு மற்றும் சேவையைப் பெறும் பதிவு செய்த வணிகர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் வரி செலுத்த வேண்டும் என்பது அநீதியான செயல் என வணிகர்கள் கூறுகின்றனர்.
வரியை வசூலிக்க வேண்டியது அரசின் கடமை: வரியை வசூலிக்க வேண்டியது அரசின் கடமை. வரியை யார் செலுத்தவில்லையோ அவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து அரசு வரியை வசூலிக்க வேண்டும். தங்களுடைய விற்பனைக்கான வரியிலிருந்து அதை கழித்துவிட்டு மீதியை செலுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தாலும், அதற்கான பணிச்சுமை, நிதிச்சுமை பதிவுப்பெற்ற வணிகர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் தேவையே இல்லாமல் அதிகரித்துள்ளது.
முறையாக வரி செலுத்தி வருபவர்களுக்கு தான் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அவர்கள் சரியான வருமானத்தையும், வியாபார நடவடிக்கைகளையும் பதிவு செய்து அதற்கான வரியை செலுத்தியுள்ளார்களா என சோதனை செய்து அதில் தவறுகள் இருந்தால் அதற்கு அபராதம், கூடுதல் வரியென அரசால் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வரியே செலுத்தாதவர்களுக்கு எந்தப் பிரச்னையும் எழுவதில்லை.
அத்தகைய சூழ்நிலை தான் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கும், வணிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சரியாகப் பதிவு செய்து வணிகம் செய்பவர்களுக்கு பணிச் சுமையும், கூடுதலாக வரி செலுத்தும் நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அனைத்துத் தரப்பினருக்கும் வரி: பதிவு செய்யாதவர்களுக்காக, பதிவு செய்தவர்கள் வரி செலுத்த வேண்டும் என்பது நாட்டின் குடிமக்களுக்கிடையே அரசு ஏற்றத் தாழ்வு உருவாக்குவதைப் போன்று உள்ளது. அதை கைவிட்டு தொழில் செய்பவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்குள் வர்த்தகம் செய்பவர்களும் வரியை வசூலித்து அதை அரசு கணக்கில் நேரடியாக வரி செலுத்தும் எளிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அவர்கள் தாங்கள் செய்யும் வர்த்தகம் குறித்த விவரங்களை எளிய முறையில் அரசுக்கு தெரியப்படுத்தவும், அதற்கான வரியை செலுத்தவும் மிகவும் எளிதான நடைமுறையை அமல்படுத்தினால் பதிவு செய்தவர், பதிவு செய்யாதவர் என இரு தரப்பினருக்கிடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வு இருக்காது. இல்லையெனில் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் இருப்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கான ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்குள் வர்த்தகம் என்ற உச்சவரம்பை ரூபாய் ஒரு கோடி என்று இருக்குமாறு செய்ய வேண்டும்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எம்.வி.சுவாமிநாதன் கூறியதாவது:
வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து வரியை வசூலிப்பது அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கடமையாகும். அப்பணியை, பதிவு செய்த வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் தலையில் சுமத்துவது என்பது அவர்களுக்கு தாங்கமுடியாத சுமையாகும். குறிப்பாக உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கெனவே மிகவும் சிரமத்திற்கிடையே கடுமையான சூழ்நிலையில் தான் தொழில் செய்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பதிவு செய்யாதவருக்காக, பதிவு செய்த வணிகர் அல்லது தொழில் முனைவோர் வரி செலுத்த வேண்டும் என்பது அவர்களை சிரமத்துக்குள்ளாக்கும். அரசு செய்ய வேண்டிய பணியை வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது திணிப்பது அவர்களை மேலும் நலிவடையச் செய்யும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பவுள்ளோம் என்றார் அவர்.

*பதிவு செய்யாதவர்களுக்காக, பதிவு செய்தவர்கள் வரி செலுத்த வேண்டும் என்பது நாட்டின் குடிமக்களுக்கிடையேஅரசு ஏற்றத் தாழ்வு உருவாக்குவதைப் போன்று உள்ளது. *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com