கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க வேண்டும்: டி.ராஜா

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியை அரசியல் தாண்டி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க வேண்டும்: டி.ராஜா

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியை அரசியல் தாண்டி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தனிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயர்நிலைக் குழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதேபோல, கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம், இலங்கை அகதிகள் முகாம் ஆகியவற்றின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன.

அதிமுக பல்வேறு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கிறது. இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் அரசியல்ரீதியாக பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது.
மாட்டிறைச்சி என்ற பெயரால் தலித்துகள், சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர். இதைப் பார்க்கும்போது இந்தியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். மகாத்மா காந்தி, ராஜகோபாலச்சாரியார் ஆகியோரது பேரன் என்பதைக் கடந்து குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு செயலாளராகவும், மேற்கு வங்க ஆளுநராகவும், வெளிநாடுகளில் இந்திய அரசின் அதிகாரியாகவும் அவர் பணியாற்றிள்ளார்.

அரசியல் சட்ட நெறிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டவர். இன்றைய சூழலில் குடியரசு துணைத் தலைவருக்கு அவர் பொருத்தமானவர். எனவே, இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் கட்சி, அரசியலைத் தாண்டி அவரை ஆதரிக்க வேண்டும்.

சென்னையில் செயல்பட்டு வந்த தமிழ் செம்மொழி ஆய்வு மையம் திருவாரூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக மட்டுமே ஆய்வு மையம் செயல்பட முடியும். இது இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் முயற்சி என்றார்.

இதைத் தொடர்ந்து, கட்சியின் மாநிலச் செயலாளர் இர.முத்தரசன் கூறுகையில், "நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதையும் மீறி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் நீண்ட காலமாக ஓஎன்ஜிசி நிறுவனம் எரிபொருள் எடுத்து வந்தது. தற்போது, குழாய் வெடித்து எரிபொருள் வெளியேறியதால், வேளாண் நிலம், குடிநீர் பாழாகியுள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதுடன், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்து அச்சுறுத்தி வருகின்றனர்' என்றார்.

முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், " மீத்தேன், ஹைட்டேரா கார்பன் திட்டத்தின் விளைவுகள் குறித்து சேலத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்த மாணவி உள்ளிட்ட இரண்டு பெண்களை சிறையில் அடைத்துள்ளனர்.

மக்கள் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. கைது செய்யப்பட்ட இரு பெண்கள் மீதான வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com