உமறுப் புலவர் பிறந்தநாள் அரசு விழா: தமிழக அரசுக்கு பாராட்டு

சீறாப்புராணம் காப்பியத்தை படைத்து தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சிறப்பு சேர்த்த இஸ்லாமிய தமிழ் அறிஞர் உமறுப் புலவர் பிறந்த தின விழா இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்பட

சீறாப்புராணம் காப்பியத்தை படைத்து தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சிறப்பு சேர்த்த இஸ்லாமிய தமிழ் அறிஞர் உமறுப் புலவர் பிறந்த தின விழா இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கும், கோரிக்கைக்கு வலு சேர்த்த தினமணி நாளிதழுக்கும் இஸ்லாமிய மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
உமறுப் புலவர் பிறந்த தின விழாவை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உமறுப் புலவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள உமறுப் புலவர் மணிமண்டபத்தில் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உமறுப் புலவர் சங்கத் தலைவர் அல்ஹாஜ் உ. காஜா மைதீன் தலைமை வகித்தார். எழுத்தாளர் இளசை மணியன், அகமது ஜலால் பைஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு உமறுப் புலவர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜுக்கு இஸ்லாமிய சமுதாய பெரியோர்கள், தமிழ் அறிஞர்கள் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு விழாவை நடத்தி, பாரதிக்கு மணிமண்டபம், பாரதியார் பெயரில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாரதியார் கூட்டுறவு நூற்பாலை ஆகியவற்றை எம்.ஜி.ஆர். அமைத்துத் தந்தார்.
உமறுப் புலவர் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டுமென தமிழறிஞர்கள், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகசீலர்கள், தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்களுக்கு நினைவகங்கள், மணிமண்டபங்கள், அரசு விழாக்கள் அறிவித்து சிறப்பு செய்தார். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, உமறுப் புலவர் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் செய்தி, விளம்பரத் துறை மானிய கோரிக்கையின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டேன். தமிழறிஞர்கள், இஸ்லாமிய மக்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர் என்றார்.
செய்தியாளர்கள் கேட்ட மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராகத் திகழ்ந்த மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை பத்திரிகையாளர் தினமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

தினமணிக்கு நன்றி

உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும்விதமாக, "உமறுப் புலவருக்கு ஏன் இல்லை அரசு விழா?' என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் சிறப்புக் கட்டுரை வெளியானது. இதற்காக தினமணி நாளிதழுக்கு இஸ்லாமியப் பெருமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக எட்டயபுரம் உமறுப் புலவர் சங்கத் தலைவர் உ. காஜா மைதீன் தெரிவித்தார்.
எழுத்தாளர் இளசை மணியன் கூறுகையில், தினமணி நாளிதழில் உமறுப் புலவர் குறித்து வெளியான செய்தியின் தாக்கத்தால்தான் சுமார் நாற்பது ஆண்டு காலக் கோரிக்கையானது அரசு விழாவாக வடிவம் பெற்றுள்ளது. உமறுப் புலவர் பிறந்த தின விழா, அரசு விழாவாக இனிவரும் காலங்களில் கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக அரசு, அமைச்சர் கடம்பூர் ராஜு, தினமணி நாளிதழுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com