அரசுப் பள்ளிகளில் உணவு இடைவேளை நேரம் குறைப்புக்கு கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உணவு இடைவேளை நேரம் குறைக்கப்படும் முடிவுக்கு, கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உணவு இடைவேளை நேரம் குறைப்புக்கு கடும் எதிர்ப்பு


சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உணவு இடைவேளை நேரம் குறைக்கப்படும் முடிவுக்கு, கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில் தற்போது உணவு இடைவேளை என்பது ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் என்ற அளவுக்கு விடப்படுகிறது. இதனை 40 நிமிடங்களாகக் குறைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக இந்த திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இதனை அமல்படுத்த முடிவு செய்யப்படட்து.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளியில் உணவு இடைவேளை சுமார் 80 நிமிடங்கள் என்பது ஒரு நீண்ட நேரமாகும். இதனால், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உணவு இடைவேளையில் பள்ளியில் இருந்து வெளியே செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. எனவேதான் இதனை குறைக்க முடிவு செய்யப்பட்டது என்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் சத்துணவைத்தான் சாப்பிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு கூடுதல் நேரம் தேவையற்றது என்கிறார்.

குழந்தைகள் நல மருத்துவர்கள் இது குறித்து கூறுவது வேறாக உள்ளது. அதாவது, பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவை நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கே பாதி நேரம் போய்விடுகிறது.  சில குழந்தைகள் சாப்பாட்டை மெதுவாக மென்று சாப்பிடும். அதுபோன்ற குழந்தைகளை இந்த நேரக் குறைப்பு நிச்சயம் பாதிக்கும். அதே போல, சாப்பிட்டதும் ஓய்வு எடுக்கும் வசதியையும் இந்த நேரம் வழங்கும் என்று கூறுகிறார்கள்.

இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், மிச்சப்படுத்தப்படும் நேரம் நிச்சயமாக கல்விப் புகட்ட பயன்படுத்தப்படாது. அவர்களது மற்ற விளையாட்டு, இதர செயல்பாடுகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்கிறார்.

ஆனால், பல அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்மை, அவர்களது மனப்பான்மை போன்றவை மாறாமல், இந்த திட்டம் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று சொல்ல முடியாது என்பதே கல்வியாளர்களின் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com