இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
By DIN | Published on : 18th July 2017 12:36 AM | அ+அ அ- |

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நம்புதாளை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க திங்கள்கிழமை வந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினர்.
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் நம்புதாளை பகுதி மீனவர்கள் 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை பகுதியை சேர்ந்த தொண்டிமுத்தன் மகன் நாகூர்(50), முருகன் மகன் எம்.செட்டி(35), நாகலிங்கம் மகன் சக்திவேல்(22), மாற்றுத் திறனாளியான பார்த்தீப்(30) ஆகிய 4 மீனவர்கள் நாட்டுப்படகில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் அருகேயுள்ள ஏம்பவயல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி இலங்கை கடல்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர்.
பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூலை 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி ஆர்.சபேசன் முன்னிலையில் உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாகூரின் மனைவி என்.ஏலகன்னி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.