ஐஐடியில் மான்கள் இறப்பு விவகாரம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு

ஐஐடி வளாகத்தில் மான்கள் இறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐஐடி வளாகத்தில் மான்கள் இறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபின் தாக்கல் செய்த மனு: சென்னை ஐ.ஐ.டி. வளாகம், 583 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, மான்கள், கலைமான்கள் உள்பட அரிய வகை உயிரினங்கள் உள்ளன.
அந்த வளாகத்தில், 1,300 குடும்பங்கள், 8,500 மாணவர்கள் வசிக்கின்றனர். பத்து உணவகங்கள் உள்ளன. மேலும், 'சாரங்' மற்றும் 'சாஸ்த்ரா' போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அப்போது அதிகளவில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல், வளாகத்திலேயே கொட்டப்படுகின்றன. இதனை உட்கொள்வதாலும், இரை தேடி வரும் நாய்கள் கடிப்பதாலும், மான்கள் இறக்கின்றன.
நிகழ்ச்சிகளின்போது, அதிகளவில் வாகனங்கள் வருகின்றன. அந்த வாகனங்களில் சிக்கியும், மான்கள் படுகாயமடைகின்றன.
எனவே, ஐ.ஐ.டி., வளாகத்தில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதுடன், குப்பையை முறையாக அகற்ற உத்தரவிட வேண்டும். சாரங் மற்றும் சாஸ்த்ரா நிகழ்ச்சிகளை வேறு இடத்தில் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி எம்.எஸ்.நம்பியார், இந்த வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திங்கள்கிழமை அளித்துள்ள பதில் மனு: ஐஐடி வளாகத்தில் 2006 ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெற்றுள்ள 10க்கும் மேற்பட்ட கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெறவில்லை.
ஐஐடி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிருஷ்ணா வாயில், எஸ்.ஆர்.பி. மற்றும் வேளச்சேரி வாயில்களில் குப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் மின்னணுக் கழிவுகள் 5 மடங்கு அதிகரித்துள்ளது. உயிர் வாயு திட்டங்கள் செயல்படவில்லை என பதிலளித்தது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பதிலைக் கேட்ட பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தமிழக அரசு, ஐஐடி நிர்வாகம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழக வனத் துறை பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி, இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com