குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி நீட் தேர்வுக்கு உரிய தீர்வு காண வேண்டும்: மு.க. ஸ்டாலின்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி நீட் தேர்வுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி நீட் தேர்வுக்கு உரிய தீர்வு காண வேண்டும்: மு.க. ஸ்டாலின்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி நீட் தேர்வுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். ஆனால், உரிய பதிலை அளிக்க அரசு முன்வராததை கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் பல துன்பங்களுக்கும், அல்லல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் கொடுமை தமிழ்நாட்டில் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, உடனடியாக ‘நீட்’ தேர்வுப் பிரச்னைக்கு ஒரு முடிவை இந்த அரசு காண வேண்டும். எப்படி ஜல்லிக்கட்டுப் பிரச்னையில், அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் வரை சென்று அதற்கு அழுத்தம் கொடுத்து, ஒப்புதலை எப்படிப் பெற முடிந்ததோ, அதேபோல், ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில், இதே சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்களை திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்து, அது தில்லிக்கு சென்றதே தவிர குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது பின்னர்தான் தெரிந்துக் கொண்டோம்.

ஆக, குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுக்க, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிற இந்த நேரத்தில், ஒரு நல்ல வாய்ப்பு இந்த அரசுக்கு கிடைத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தக்கூடிய வேட்பாளருக்கு ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஆதரவு தர வேண்டும் என்று சொன்னால் ‘நீட்’ தேர்விர்கு ஒரு முடிவினை நிச்சயமாக அவர்களால் ஏற்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், அதை அவர்கள் தவறவிட்டு விட்டார்கள். இப்போது ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடவில்லை, அடுத்து துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலை பயன்படுத்தியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ‘நீட்’ தேர்வு பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை, தமிழகத்தில் உள்ள ஏழை - எளிய மாணவர்களுக்கு உருவாக்கித் தருவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை நான் அவையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துவைத்தேன். ஆனால், அந்தத் துறையினுடைய அமைச்சர், முதல்வர் ஆகியோர் ஒரு வார்த்தை கூட எழுந்து பதில் சொல்ல விரும்பவில்லை. இதிலிருந்தே மத்திய அரசிற்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரிகிறது.

அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறபோது கூட, நடந்திருக்கக்கூடிய சம்பவங்களை பற்றிதான் சொல்கிறாரே தவிர, நடக்கக்கூடியவற்றை சொல்லவில்லை. நான் கேட்டக் கேள்விக்கு எந்தவித பதிலையும் தராத நிலையில் விளக்கம் தந்தாரே தவிர, வேறு விளக்கம் தரவில்லை. எனவே, அதில் எங்களுக்கு திருப்தி இல்லாத காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி, எங்களுடைய கண்டனத்தை நாங்கள் அவையில் தெரிவித்துவிட்டு, அதற்கு அடையாளமாக வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறோம்.

கேள்வி: நேற்று உங்களை சந்தித்த மாணவர்கள் என்ன கோரிக்கைகளை முன்வைத்தார்கள்?

பதில்: ஒரே ஒரு கோரிக்கைதான். அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று, குடியரசுத் தலைவரிடம் சென்று அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படியும் இதற்கு தீர்வு வரவில்லை என்றால் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடவிருக்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். நிச்சயமாக அதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

பலமுறை தில்லிக்கு சென்ற அமைச்சர்கள் பிரதமரை பார்க்கப் போனதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நலனை கருதியல்ல, அவர்களுடைய நலனை கருதி. அவர்களுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள, அவர்கள் மீது தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ள நடவடிக்கைகள், வருமான வரித்துறை வழங்கியிருக்கும் நோட்டீஸ் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில்தான் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, மக்களை பற்றியோ, மாணவர்களை பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com