குடியரசுத் தலைவர் தேர்தல்: 2 மணி நேரத்தில் வாக்குகளைச் செலுத்திய 232 தமிழக எம்.எல்.ஏ.க்கள்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பேரவைத் தலைவர் தனபால், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பேரவைத் தலைவர் தனபால், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்குப் பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கியது. தமிழக எம்.எல்.ஏ.க்கள் 2323 பேரும் 12 மணியளவில் வாக்களித்து விட்டுப் புறப்பட்டனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குழுக் கூட்ட அறை வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டிருந்தது.
இந்த வாக்குச் சாவடிக்குள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் நுழைந்ததும் அவர்களிடம் இருந்து ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி சீட்டுகள், வாக்குப் பதிவு அலுவலரால் பெறப்பட்டது.
இதன்பின், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,வின் பெயர் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து வாசிக்கப்பட்டு அவருக்கு வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டது. அதனுடன் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான பேனாவும் கொடுக்கப்பட்டது.
வாக்குச் சீட்டையும், பேனாவையும் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ.க்கள் வாக்குப் பதிவு அறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய இடத்துக்குச் சென்று தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
வாக்குச் சீட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் (தேசிய ஜனநாயகக் கூட்டணி), மீரா குமார் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) ஆகிய இருவரின் பெயர்கள் இருந்தன. தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயருக்கு எதிரே 1 என்ற எண்ணை பேரவை உறுப்பினர்கள் குறித்தனர். இதன் பின், வாக்குப் பதிவு அறையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாக்கினைச் செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வாக்கினை முதலாவதாகச் செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் பி.தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
2 மணி நேரத்தில்...: காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய சூழலில், 11 மணிக்குள்ளாக 110 எம்.எல்.ஏ.-க்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினைச் செலுத்தினர்.
இதற்காக பேரவை வளாகத்திலும், வாக்குப் பதிவு அறை அமைந்திருந்த குழுக்கூட்ட அறைக்கு அருகிலும் எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நண்பகல் 12 மணியளவில் அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தங்களது வாக்கினைச் செலுத்தினர்.
அனைவரும் வாக்களித்த பிறகு, இறுதியாக அதிமுக எம்.எல்.ஏ. (புரட்சித்தலைவி அம்மா அணி) செம்மலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
2 வாக்குகள் பதிவில்லை: திமுக தலைவர் கருணாநிதி (திருவாரூர் தொகுதி) தனது வாக்கினைப் பதிவு செய்ய வரவில்லை. இதேபோன்று, ஆர்.கே.நகர் சட்டப் பேரவையும் காலியாக இருப்பதால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் 2 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் 232 எம்.எல்.ஏ.,க்கள் நண்பகல் 12 மணிக்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
கேரள எம்.எல்.ஏ., தமிழக எம்.பி.: தமிழக எம்.எல்.ஏ.-க்களுடன் கேரள எம்.எல்.ஏ. பரக்கால் அப்துல்லாவும் வாக்களித்தார். சிகிச்சைக்காக சென்னை வந்த அவர், தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலேயே தனது வாக்கினைப் பதிவு செய்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அவர் குற்றியாடி தொகுதி எம்.எல்.ஏ., ஆவார்.
இதேபோன்று, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தனது வாக்கினை சென்னையிலேயே பதிவு செய்தார்.
இரவு விமானத்தில்...திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, வாக்குப் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்குப் பெட்டியானது சென்னையில் இருந்து இரவு 9.10 மணிக்கு தில்லி செல்லும் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
வாக்குப் பெட்டியை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளான க.பூபதி (பேரவைச் செயலாளர்), பா.சுப்பிரமணியம் (பேரவை இணைச் செயலாளர்) ஆகியோர் தில்லிக்கு எடுத்துச் சென்றனர்.
ஐந்து மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்
சென்னை, ஜூலை 17: குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நண்பகல் 12 மணிக்கே முடிவடைந்தாலும், மாலை 5 மணி வரை அதிகாரிகள் காத்திருந்தனர்.
யார் யார் என்னென்ன...குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் பொறுப்பை சட்டப் பேரவைச் செயலகம் ஏற்றிருந்தது. வாக்குச் சாவடி அலுவலர்களாக இரண்டு பேரும், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இரண்டு பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஒரு வாக்குச் சாவடி அலுவலர் எம்.எல்.ஏ.க்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் வாசித்து உறுதி செய்தார். மற்றொரு வாக்குச் சாவடி அலுவலர், எம்.பி.க்களுக்கான வாக்குச் சீட்டை அளிக்கும் பணியில் ஈடுபட்டார். உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக சட்டப் பேரவைச் செயலாளர் பூபதி, இணைச் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் செயல்பட்டனர். அவர்களில் இணைச் செயலாளர் சுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்களுக்கான வாக்குச் சீட்டினை கிழித்து அதனை மடித்து வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
பார்வையாளர்கள்: குடியரசுத் தலைவர் தேர்தலை மேற்பார்வையிட தில்லியில் இருந்து சிறப்புப் பார்வையாளராக அன்ஷு பிரகாஷ் வந்திருந்தார். தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இருவரும் வாக்குச் சாவடி அறையில் அமர்ந்து வாக்குப் பதிவு நிலவரங்களை மேற்பார்வையிட்டனர். நண்பகல் 12 மணிக்குள்ளாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்த நிலையில், வாக்குப் பதிவு முடியும் நேரமான மாலை 5 மணி வரை அதிகாரிகள் வாக்குச் சாவடி அறையிலேயே காத்திருந்தனர். இதன் பின், வாக்குப் பெட்டி சீல் வைக்கப்பட்டு விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தபின் அதிகாரிகள் வாக்குச் சாவடி அறையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பேரவைத் தேர்தல்கள் போன்று வாக்களித்த எம்.எல்.ஏ.-க்கள்
பேரவை, உள்ளாட்சி தேர்தல்களைப் போன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ.-க்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
தலைமைச் செயலகத்துக்கு காலையிலேயே வந்த எம்.எல்.ஏ.-க்கள் வாக்களிப்பதற்காக காத்திருந்தனர். காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இதன் பின், பேரவைத் தலைவர் பி.தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரிசையாக தங்களது வாக்கினைச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, அதிமுக, திமுக எம்.எல்.ஏ.-க்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
இதனால், வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.-வும் வாக்களிக்க 2 முதல் 3 நிமிஷ ங்கள் வரை எடுத்துக் கொண்டனர். எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் தொடர்ச்சியாக வாக்களித்ததால் 232 எம்.எல்.ஏ.- க்களும் தங்களது வாக்கினை நண்பகல் 12 மணிக்குள் செலுத்தினர். வாக்குப்பதிவு அத்துடன் நிறைவடைந்தது.
முகவர்களான எம்.எல்.ஏ.,க்கள்
 தமிழக எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முகவர்களாகச் செயல்பட்டனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் முகவர்களாகச் செயல்பட்டனர். ராம்நாத் கோவிந்துக்கு, அதிமுக அம்மா அணி சார்பில் பொள்ளாச்சி ஜெயராமனும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலையும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் முகவர்களாக இருந்தனர்.
மீரா குமாருக்கு திமுக சார்பில் அர.சக்கரபாணியும், காங்கிரஸ் சார்பில் விஜயதரணியும் முகவர்களாக இருந்தனர்.
காத்திருந்த முகவர்கள்: தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நண்பகல் 12 மணிக்கே முடிவடைந்தாலும், வாக்குப் பதிவு முடிவடையும் நேரமான மாலை 5 மணி வரை முகவர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டி சீலிடப்பட்டது. அவர்களது ஒப்புதலுடன் வாக்குப் பெட்டி தலைமைச் செயலகத்தில் இருந்து மாலை 6.30 மணியளவில் தில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com