சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யத் தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை, அடையாற்றில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்துக்கு இடமாற்றம் செய்ய எந்தவிதத் தடையும் இல்லை

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை, அடையாற்றில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்துக்கு இடமாற்றம் செய்ய எந்தவிதத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் திறக்கும் முன்னர், காமராஜர் சாலையின் கிழக்குப் பகுதி நடைபாதை முடிவில் பிற தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் சிவாஜி சிலையை மாற்றி அமைக்கக் கோரியும், மணிமண்டபத்தில் புதிய சிலையை நிறுவவும் கோரி கடந்தாண்டு செப்டம்பர் 28 மற்றும் கடந்த மே 17-ஆம் தேதி வழங்கிய மனுக்களை தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே. சந்திரசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், பணிகள் முடிவுற்றவுடன் அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்துக்கு சிவாஜி சிலை மாற்றப்படும் என்றார்.
இதையடுத்து, சிவாஜி சிலையை மணிமண்டபத்துக்கு இட மாற்றி அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு, தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்தப் புதிய வழக்கு தடையாக இருக்காது எனக்கூறி, இந்த மனுவுக்கு நான்கு வார காலத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி எம்.துரைசாமி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com