தமிழகத்துக்கு இதுவரை 2.4 டிஎம்சி தண்ணீர் அளிப்பு: கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல்

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரை 2.4 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரை 2.4 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:தென் மேற்கு பருவ காலத்தில் போதுமான மழை பெய்யாததால், காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளில் வரலாறு காணாத அளவுக்கு மிக குறைந்த தண்ணீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 57 டிஎம்சி தண்ணீர் இருந்தது. நிகழாண்டில் தற்போது 26 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. இதை வைத்துகொண்டு கர்நாடகத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்ய இயலாது.
எனவே, காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் எண்ணமே கர்நாடக அரசிடம் இல்லை. அணைக்கு வரும் நீரில் கொஞ்சம் நீரை தமிழகத்துக்கு அளித்து வருகிறோம். நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுநாள் வரை காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 2.4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
காவிரி நதிப் படுகை பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. எனவே, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. குடிநீருக்கு முன்னுரிமை அளிப்பதால், தற்போதுள்ள நீர் குடிநீருக்காக பாதுகாக்கப்படுகிறது.
மகதாயி நதிநீர் விவகாரம்: மகதாயி நதியில் இருந்து கோவா மாநிலத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை. மகதாயி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கலசா-பண்டூரி கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மகதாயி நதியைச் சென்று சேரும். மகதாயி நதிநீர் விவகாரம் உணர்வுப்பூர்வமானதாகும். நதிநீர் உரிமைக்காக கர்நாடகத்தின் 4 மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com