திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் 5 பேர் கைது

சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்த வங்கதேச இளைஞர்கள் 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்த வங்கதேச இளைஞர்கள் 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூரில், மேற்கு வங்கத்தை சேர்ந்த யாசின் காஜா என்பவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர், வளையங்காடு பகுதியில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவரின் பின்னலாடை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார்.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு வேலையாள்களை அனுப்பிவைக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் மூலமாக 6 இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் எனக் கூறி, பின்னலாடை நிறுவனத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வேலைக்கு சேர்த்துள்ளார் யாசின் காஜா. வேலைக்கு சேரும்போதே அவர்களிடமிருந்து அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை யாசின் கேட்டுள்ளார். ஆனால், அந்த இளைஞர்கள், ஆவணங்களைப் பிறகு தருவதாகக் கூறியுள்ளனர். ஜூலை 15-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டியிருந்ததால், அவர்களிடம் அடையாள சான்றுகள் குறித்து மீண்டும் கேட்டுள்ளார். இதனால், அந்த இளைஞர்கள் ஊதியத்தைப் பெறாமலேயே அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து, ராம்நகரில் அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்ற யாசின், அவர்களிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள், தலா ரூ. 5 ஆயிரம் தருவதாகவும், தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்து தருமாறும் யாசினிடம் தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த யாசின், அவர்களிடம் நீண்ட நேரம் பேசியதில், பாகிஸ்தான் சென்று, தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்ந்து வேலை செய்ததாக அவர்களில் ஒருவர் தெரிவித்தாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த யாசின், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்பில் தான் ஏற்கெனவே உறுப்பினராக இருந்த காரணத்தால், திருப்பூரில் உள்ள இடதுசாரி அமைப்பினரைத் தொடர்பு கொண்டு, இந்த இளைஞர்கள் குறித்து தெரிவித்துள்ளார். அதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாநகர காவல் ஆணையர் பி.நாகராஜன் உத்தரவின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆணையர் அண்ணாதுரை, ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீஸார், அந்த 6 இளைஞர்களையும் பிடித்தனர்.
வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள்: விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த தலுவார் உசேன் (28), முகமத் சதாத் (26), ஆசிக் (20), முகமது மமூன் (27), முகமது பாபு (27), ராஜாமியா சர்தா (28) என்பதும், அவர்களில், தலுவார் உசேனிடம் மட்டும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருப்பதும், மற்றவர்கள் 5 பேரும் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலுவார் உசேனை விடுவித்த போலீஸார், மற்ற 5 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அவர்களில் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி இந்தியாவுக்கு அவர் வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதற்குப் பிறகே மற்ற 5 பேர் வந்துள்ளனர். மேற்கு வங்க முகவரியில் முகமது சதாத் என்ற பெயரில் அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை பற்றி விசாரித்து வருகிறோம். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பிறகு அஜய் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடி வருகிறோம் என்றனர்.
இது குறித்து உதவி ஆணையர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, 6 பேரின் முழு விவரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. அவர்களது உறவினர்களிடம் கேட்டுள்ளோம். தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. அவர்களுடன் வேலை செய்தவர்கள் உள்ளிட்ட சிலரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com