பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் 

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் 

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு நிர்ணயித்துள்ள தகுதிகள் பல்கலைக்கழகங்களை சீர்குலைக்கும் தன்மை கொண்டவையாகும்.

துணைவேந்தர் பதவிக்கு வர விரும்புபவர்கள் முனைவர் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்களிலோ, முதுநிலைப் பட்டப்படிப்பு வழங்கும் கல்லூரிகளிலோ 20 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றிருக்க வேண்டும் அல்லது அரசு நிதியில் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதே துணைவேந்தர் பணிக்கான அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தனியார் சுயநிதிக் கல்லூரிகள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவை தவிர கூடுதல் தகுதிகளும் மிகவும் எளிமையானவையாகவே காணப்படுகின்றன.

இந்தத் தகுதிகளைக் கொண்டு தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான, திறமையான துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. மாறாக, திறமையற்ற, ஆட்சியாளர்களின் கண்ணசைவில் இயங்கக்கூடிய துணைவேந்தர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் அறிவுக்கோயில்களாகவும், ஆராய்ச்சி நிலையங்களாகவும் தான் திகழ்ந்தன. முனைவர்கள் அனந்தகிருஷ்ணன், முத்துக்குமரன், பாலகுருசாமி, குழந்தைசாமி, வசந்திதேவி என அண்மைக்காலங்களில் கூட திறமையான, நேர்மையான  துணைவேந்தர்கள் தான் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களை மிகவும் சிறப்பாக நிர்வகித்து வந்தனர்.

ஆனால், அண்மைக்காலங்களில் தகுதியில்லாதவர்கள் பணத்தின் உதவியுடன் மட்டுமே பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளைக் கைப்பற்றினர். அதன்பிறகே தமிழகத்தில் உயர்கல்வியின் தரம்  தரைமட்டத்தைத் தொட்டது. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது தான் கற்றறிந்த வல்லுனர்களின் எண்ணமாக உள்ளது.  இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் துணைவேந்தர் பணிக்கான தகுதிகள் கடுமையாக்கப் பட வேண்டும். ஆனால், தமிழக அரசு நிர்ணயித்தக் கல்வித்தகுதிகளை உற்று நோக்கினால் ஒருவர்  முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோ, பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதோ கட்டாயமாக்கப்படவில்லை. புதிய விதிகளின் அடிப்படையில்  தனியார் கல்லூரியிலோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலோ ஒருவர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு துணைவேந்தராகிவிட முடியும். இது ஆபத்தானது.

அண்மைக்காலமாகவே அரசு பல்கலைக்கழகங்கள் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் கைப்பாவையாக மாறி வருகின்றன. இதற்காக மிகவும் தந்திரமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள் திணிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒருவரையோ அல்லது தங்களது கல்லூரிகளில் பணியாற்றும் ஒருவரையோ துணைவேந்தர்களாக பரிந்துரைக்கின்றனர். இதை ஒழிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவோரையும் துணைவேந்தர்களாக நியமிக்க அனுமதித்தால் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் கல்லூரி ஆசிரியர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் தனியார் கல்லூரி லாபி எந்த அளவுக்கு வலிமையானது என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த உண்மை புரியக்கூடும். 

பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி தான் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதிலும் குறிப்பாக பல்கலை மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படக் கூடாது. இந்த விதிகளைத் தளர்த்தி துணைவேந்தர்களை நியமித்ததால் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் முதல் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரை சந்தித்த சீரழிவுகளை கல்வி உலகம் மறந்து விடவில்லை. எனவே பல்கலை.களை மீண்டும் புதைகுழியில் தள்ளிவிடக் கூடாது.

பல்கலைக்கழக மானியக்குழு விதி 7.3.0 பிரிவில்,‘‘உச்சப்பட்ச திறமை, நம்பகத்தன்மை, நெறிகள், அமைப்பின் மீதான உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக 10 ஆண்டுகளோ அல்லது புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிர்வாக அமைப்புகளில் பேராசிரியருக்கு இணையான பதவியில் 10 ஆண்டுகளோ பணியாற்றிய தகைசால் கல்வியாளர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட  வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகைசால் கல்வியாளர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப் பட்டால் மட்டுமே கல்வி நிறுவனங்கள் தலைசிறந்தவையாக உருவெடுக்கும். மாறாக, தமிழக அரசின் புதிய விதிகளின்படி துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், அது ஒரு காலத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக விளங்கிய பல்கலைக்கழகங்களை தனியாரிடம் அடகு வைப்பதற்கு சமமானதாகிவிடும்.

எனவே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய தகுதி விதிகளை நீக்கி விட்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com