போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 26, 27, 29 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக அனைத்து போக்குவரத்து

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 26, 27, 29 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து திங்கள்கிழமை (ஜூலை 17) வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் கொண்ட குழு, போக்குவரத்து கூட்டமைப்பு சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்தியது.
இதில் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும்-செலவுக்கும் இடையேயான வித்தியாச'த் தொகையை தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, ஈடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். புதிய ஊதிய ஒப்பந்தம் உருவாக்கத் தேவைப்படும் நிதியை அரசு அளிக்க வேண்டும். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களிடம் இருந்து பல்வேறு இனங்களில் பிடித்தம் செய்தத் தொகையை எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் செலவு செய்வதைத் திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
இதைக் கேட்டுக் கொண்ட அமைச்சரவைக் குழு மூன்று மாத காலத்துக்குள் போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும், தொழிலாளர்களின் பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதர பிரச்னைகளைபேசி முடிப்பதாகவும் உறுதி அளித்தது. ஆனால் தொடர்ந்து நிதிப் பிரச்னை ஏற்படாமல் இருக்க அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்த ஏதுவாக போக்குவரத்து மானியக் கோரிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லை.
போக்குவரத்துத் துறை செயலர், பேச்சுவார்த்தைக்கான துணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது சேம பணியாளர், தினஊதிய தொழிலாளர்களின் ஊதியத்தை ஒப்பந்தப்டி வழங்குவது, பணிக்கொடை சம்பந்தமான ஒப்பந்த சாரத்தை அமலாக்குவது, மிகை நேர பணிக்கான ஊதியத்தை சட்டப்படி வழங்குவது, சீருடை, அதற்கான தையல்கூலி, இரவுப்பணிப்படி, போன்றவைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியபோது அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என்றே மீண்டும், மீண்டும் கூறப்படுகிறது.
எனவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டம் திங்கள்கிழமை(ஜூலை 17) நடைபெற்றது. இதில் தங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
இதை ஏற்க மறுத்தால் ஜூலை 26,27,29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 26-ஆம் தேதி நாகர்கோயில், நெல்லை, விருதுநகர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம் ஆகிய இடங்களிலும், 27-ஆம் தேதி திண்டுக்கல், திருச்சி, வேலூர், கடலூர், ஆகிய இடங்களிலும், 29-ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com