மக்களின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி: வாகராயம்பாளையத்தில் மதுக்கடைக்கு 'சீல்' வைப்பு

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால், மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வாகராயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 'சீல்'

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால், மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வாகராயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 'சீல்' வைத்தனர்.
கோவை மாவட்டம், மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வாகராயம்பாளையத்தில், தென்னம்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த மே 31-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஜூன் 1, 2 -ஆம் தேதிகளில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் அதிகாரிகளும், காவல் துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, மதுக்கடையை 45 நாள்களுக்குள் இடம் மாற்றம் செய்வதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் ஜெயசந்திரன் உறுதியளித்து, அதற்கான உத்தரவாத கடிதத்தையும் பொதுமக்களிடம் வழங்கினார். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், மண்டல மேலாளர் அளித்த உத்தரவாதத்தின்படி 45 நாள்கள் கடந்தும் மதுக்கடை அகற்றப்படாததால், அப்பகுதி மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி டாஸ்மாக் உதவி மேலாளர் அலமேலுமங்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, மதுக்கடையை அகற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மதியம் 2.30 மணியளவில் மதுக்கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி டாஸ்மாக் உதவி மேலாளர் அலமேலுமங்கை கூறியதாவது:
வாகராயம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடை (1821) பொதுக்களுக்கு இடையூறாக இருப்பதால், மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று கடையை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் . அதுவரை இந்த மதுக்கடையை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com