எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு: தில்லியில் தமிழக விவசாயிகள் செருப்பால் அடித்துக் கொள்ளும் போராட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இரண்டாம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு: தில்லியில் தமிழக விவசாயிகள் செருப்பால் அடித்துக் கொள்ளும் போராட்டம்


புது தில்லி: வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இரண்டாம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லியில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், ஏற்கனவே செத்த எலிகளைக் கடிப்பது, தங்களது சிறுநீரை தாங்களே குடிப்பது என பல்வேறு அதிர்ச்சி தரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற போராட்டங்களின் மூலமாவது மத்திய அரசு தங்கள் மீது கவனம் செலுத்தாதா? தங்களது கோரிக்கைகள் என்னவென்று காதுகொடுத்து கேட்காதா என்று காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தென்ன நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு, விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அடிமைகளைப் போல நடத்துகிறார்கள்.  நேற்று சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களது கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியங்கள் உயர்த்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு வாக்களித்ததற்காக செருப்பால் அடித்துக் கொள்ளும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

வரலாறு காணாத வறட்சியை தமிழகம், புதுச்சேரி கண்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.28,708 கோடி கேட்டது.

இதற்கு நிதி வழங்கவில்லை. ஆனால், ரூ.1,748 கோடி இடுபொருள் மானியம்தான் வழங்கியது. இனிமேல் மழை பெய்து விவசாயம் செய்வதற்குதான் நிதி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் லாபகரமான அளவில் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வரை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகள் இணைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தியபோது, தமிழக முதல்வர், எங்களுக்கு எல்லாம் செய்கிறேன் என்று சொல்லி அழைத்து வந்து ஏமாற்றி விட்டார்.

கரும்புக்கு உரிய பணத்தை பெற்றுத் தருகிறேன் என்று கூறினார். ஆனால், பெற்றுத் தரவில்லை. பெரிய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. அதில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆகவே, மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com