கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது : முதல்வர் நாராயணசாமி

கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 
கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது : முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:  கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

புதுச்சேரியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. கடந்த ஆண்டு 95 சதவீத நிதியை செலவு செய்துள்ளது. தொழில் தொடங்க மானியம் வழங்கி வருகிறது.

தென்னிந்தியாவில் கர்நாடகாவிலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இது மத்தியில் ஆளும் பாஜகவின் கண்ணை உறுத்துகிறது. இதனால் மாற்றாந்தாய் தன்மையுடன் நடந்து கொண்டு வருகிறது.

தமிழகத்திற்கு 42 சதவீத நிதியை மத்திய அரசு தருகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 27 சதவீதம் மட்டுமே வழங்குகிறது.  மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கோப்புகள் தாமதமாகி வருகிறது. இதனால் முறையாக செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

மத்தியில் ஆளும் பாஜகவை தொடர்ந்து வலியுறுத்தி ரூ. 1850 கோடி மதிப்பில் பொலிவுறு நகரம் திட்டம் மற்றும்   ரூ.1400 கோடிக்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்கும் பெற்றுள்ளோம். கடந்த பேரவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களில் போட்டியிட்டு, அனைத்திலும் டெப்பாசிட் இழந்து தோற்றது. தற்போது முறைகேடாக 3 பேரை பேரவைக்குள் அனுப்ப முயற்சிக்கிறது. இதனை எதிர்த்துத்தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக ஆளுநரிடம் பேசியபோது, நான் கட்சிக்காரர்களை நியமிக்கமாட்டேன், தன்னார்வ தொண்டு நிர்வாகிகளைத்தான் நியமிப்பேன் என்றார். ஆனால் பாஜகவினரை தற்போது நியமனம் செய்து, திருட்டுக்கல்யாணம் மாதிரி இரவோடு இரவாக பதவிப்பிரமானமும் செய்து வைத்துள்ளார்.

அவர்களை ஏற்க மறுத்த  பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அதுபோல் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடியை யாரைக்கேட்டு வந்தீர்கள் எனக்கேட்ட எம்என்ஆர் பாலன் எம்.எல்.ஏ.வையும் பாராட்டுகிறேன்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பககன் முதல்வரும், ஆளுநரும் ஒன்றாகிவிட்டதாக கூறியுள்ளார். ஆளுநரை அ.தி.மு.க. ஒருநாள் எதிர்க்கிறது, ஒருநாள் ஆதரிக்கிறது. ஒருநாள் என்.ஆர். காங்கிரசை எதிர்க்கிறது. ஒருநாள் ஆதரிக்கிறது. அதிமுக  பல பிரிவுகளக சிதறி உள்ளது என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com