பேரவைக்கு குட்காவுடன் வந்த திமுகவினர்: அவை உரிமைக் குழுவுக்குச் சென்றது

தமிழக சட்டப் பேரவைக்கு குட்கா-பான்மசாலா பாக்கெட்டுகளுடன் வந்து அதனை அவையில் காண்பித்த திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த பிரச்னை அவை உரிமைக் குழுவுக்கு

தமிழக சட்டப் பேரவைக்கு குட்கா-பான்மசாலா பாக்கெட்டுகளுடன் வந்து அதனை அவையில் காண்பித்த திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த பிரச்னை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிதித் துறை, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தம், பொதுத்துறை உள்ளிட்டவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தனது பேச்சை நிறைவு செய்யும் போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது நடந்த விவாதம்:-
மு.க.ஸ்டாலின்: குட்கா 2013-ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டு விட்டது. அப்படி தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 'செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க செய்யாமை யானும் கெடும்', அதாவது, செய்யக் கூடாததை செய்தாலும் கேடு ஏற்படும், செய்யக் கூடியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் என்று திருவள்ளுவர் எடுத்துச் சொல்லியிருப்பது போல, எல்லா துறைகளிலும் நீங்கள் செய்யக் கூடியதை செய்யாமல் காலம் கடத்தி, செய்யக் கூடாததை செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புவது, சென்னையில் இருக்கும் கடைகளில் குட்கா இன்றைக்கு பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கையிலே நான் எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார்.
அப்போது அவரது மேஜையில் பிளாஸ்டிக் கோப்புக்குள் இருந்து பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகளை எடுத்துக் காண்பித்தார். இதற்கு பேரவைத் தலைவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களை மதிப்புமிக்க இந்தப் பேரவைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மதிப்புமிகுந்த இந்தப் பேரவையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டம் இயற்றும் பேரவைக்குள் தடை விதிக்கப்பட்ட பொருள்களை எடுத்து வந்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்தப் பொருள்கள் அவர்களுக்குக் கிடைத்திருந்தால் அதனை காவல் நிலையங்களுக்கு கொண்டு சேர்த்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்: தடை செய்யப்பட்ட பொருள்களைக் காண்பித்த திமுக உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுப்பேன்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: தடை செய்யப்பட்ட பொருள்களை பேரவைக்குள் எடுத்து வருவது சட்ட விரோதமான செயலாகும். எனவே, அந்தப் பொருள்களைக் காண்பித்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களை பேரவையில் காண்பித்ததை அவையை மீறிய செயலாகக் கருதுகிறேன். எனவே, இந்தப் பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்.
இதைத் தொடர்ந்து, பேச எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி.தனபால், மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து உரையாற்றும்படி அமைச்சர் ஜெயக்குமாரை கேட்டுக் கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com