அகில இந்திய வானொலியின் திருச்சி செய்திப் பிரிவு மூடல்?: அதிகாரிகள் அதிரடி மாற்றம்; 40 பேர் வேலை இழக்கும் அபாயம்

அகில இந்திய வானொலி நிலையத்தின் திருச்சி மண்டல செய்திப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்றிய செய்தியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாறுதல்
அகில இந்திய வானொலியின் திருச்சி செய்திப் பிரிவு மூடல்?: அதிகாரிகள் அதிரடி மாற்றம்; 40 பேர் வேலை இழக்கும் அபாயம்

அகில இந்திய வானொலி நிலையத்தின் திருச்சி மண்டல செய்திப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்றிய செய்தியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 46 இடங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவு, கடந்த 1981, நவம்பர் 14-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய , மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், திட்டங்கள் குறித்த தகவல்களையும், மீனவர்கள், விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் திட்டங்களையும் செய்திகளாக உடனுக்குடன் பொதுமக்களை அறியச்செய்வது, குறிப்பாக, மண்டல அளவில் பகுதி வாரியாக தகவல்களை சேகரித்து உடனுக்குடன் வழங்கி வந்தது.
திருச்சி செய்திப்பிரிவின் தமிழில் மாநிலச் செய்திகள், பண்பலை நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பண்பலையில் மணிக்கொருதரம் ஒலிபரப்பும் செய்திச்சுருக்கம் நிகழ்ச்சி, பொதுமக்கள் மத்தியில் முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது திருச்சி மண்டலம் தவிர தென் மாவட்ட மக்களையும் ஈர்த்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னைகள், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் தேயிலை, காய்கனி மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி , நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் தொடர்புடைய பிரச்னைகள் என அனைத்தையும் செய்திகளாக்கி தருகின்றது.
மண்டல செய்திப்பிரிவில் (துணை இயக்குநர் அந்தஸ்து) செய்தியாளராக ஒருவரும், அவருக்கு அடுத்தபடியாக இருவர் என மொத்தம் 3 பேர் செய்திப்பிரிவில் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு கீழ், பகுதி நேர செய்தி சேகரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள், நகல் எடுப்போர் உள்ளிட்ட தொடர்புடைய பல்வேறு பணிகளில் சுமார் 40 பேர் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இதில், செய்தியாளராகவும், உதவி செய்தியாளாரகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றும் மூன்று அதிகாரிகளில் இருவரை அதிரடியாக மாற்றம் செய்து மத்திய செய்தி மற்றும் விளம்பரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு பதிலாக மாற்றுப் பணியாளர்கள் அறிவிக்கப்படாமல் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் செய்தி வாசிப்பாளரும் எந்த நேரமும் சென்னைக்கு மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதேபோல இந்திய அளவில் மொத்தமுள்ள 46 வானொலி நிலையங்களில் 4 இடங்களில் செய்திப்பிரிவுகளை மூட பிரச்சார் பாரதி அமைப்பு மத்திய அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியை பிரதானமாக நடைமுறைப்படுத்தாத பகுதிகளில் உள்ள மண்டல செய்திப்பிரிவுகளை மூடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளன.
அந்தவகையில்தான் தமிழகத்தில் திருச்சி மற்றும் இந்தோர், கொல்கத்தா, உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள மண்டல செய்திப்பிரிவுகளை மூட திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் திருச்சி வானொலி நிலைய மண்டல செய்திப்பிரிவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தவிர தமிழ் மாநிலச் செய்தியில் மண்டல மற்றும் வட்டார பகுதிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. மேலும் செய்திப்பிரிவு என்ற அமைப்பே இல்லாத நிலையில் செய்தி எவ்வாறு இருக்க முடியும் என்ற கேள்வியும் நேயர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக செய்திப்பிரிவின் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதால், செய்திப்பிரிவில் பணிகள் இல்லை என்ற நிலை ஏற்படும். அதன் பின்னர் செய்திப்பிரிவே மாற்றம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 40 பேரும், மறைமுகமாக மேலும் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டும் இதேபோன்ற முயற்சி நடந்தது. அப்போது செய்தி மற்றும் விளம்பரப்பிரிவு மத்திய அமைச்சராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்து வந்தார். இந்த மூடல் நடவடிக்கை மத்திய அமைச்சகத்துக்கு தெரியாமல் மேற்கொள்ளப்பட்டதால், ஆத்திரமடைந்த அமைச்சர் பணியிட உத்தரவை ரத்து செய்ததுடன் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையுமே ரத்து செய்தார். எனவே அந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
36 ஆண்டுகள் பணி முடிவுக்கு வருகிறது...!
சுமார் 36 ஆண்டுகால பணியை முடிவுக்கு கொண்டு வரவுள்ளது திருச்சி வானொலி நிலைய மண்டல செய்திப்பிரிவு. இனி, திருச்சி மண்டலத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், விவசாயிகள், மீனவர் பிரச்னைகள் குறித்த செய்திகள் இடம்பெறாது. தேசிய மற்றும் சர்வதேச செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். மாநிலச் செய்தியில் சென்னை தொடர்புடைய செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மண்டல செய்தியாளராக பணியாற்றிய உதவி இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, செய்திப்பிரிவிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு செய்தியல்லாத விளம்பரப் பிரிவு அதிகாரியாக ( தற்போது காலியாக உள்ளது ) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த இடத்திலிருந்த உதவி செய்தியாளர் பணி உயர்வு பெற்று ஹைதராபாத் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com