கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றுதான் தோன்றுகிறது: மு.க. ஸ்டாலின்

கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றுதான் தோன்றுவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றுதான் தோன்றுகிறது: மு.க. ஸ்டாலின்

கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றுதான் தோன்றுவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் மற்றும் ஏரிகள் கழகத்தின் சார்பில் முழுமையாக தூர்வாரப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டு, அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகளை வழங்கியதோடு குளக்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் மரக்கன்றுகளை ஊன்றினார்.

தொடர்ந்து, செங்கம் நகரில் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,
இன்று காலை 6 மணியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் குளங்கள், ஏரிகள், ஆறுகள் எல்லாம் தூர்வாரப்பட்டுக் கொண்டிருக்கும் பணிகளை நேரடியாக ஆய்வு செய்யும் பணியினை மேற்கொண்டிருக்கிறேன். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் செலவிலே 16 குளங்கள், 2 ஏரிகள் தூர்வாரப்பட்டு முழுமையாக அந்தப் பணிகள் நிறைவுபெற்று மக்களுக்கு அர்ப்பணிக்கக்கூடிய பணியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்றைக்கு நாங்கள் அதை செய்திருக்கின்றோம்.

இந்தப் பணிகளை ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் ஆற்றிட வேண்டுமென்று சொல்லி நான் ஏற்கனவே வேண்டுகோளாக கழக தோழர்களுக்கு எடுத்து வைத்த அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயற்கையின் சொத்துகளான குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை எல்லாம் பாதுக்காக்க வேண்டும் என்ற நிலையிலே நாங்கள் இந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். நியாயமாக இந்தப் பணிகளையெல்லாம் ஆட்சிப் பொறுப்பிலே இருப்பவர்கள் தான் செய்திட வேண்டும்.  ஆனால், அந்தக் கடமையை தமிழகத்தில் இருக்கும் குதிரை பேர பினாமி ஆட்சி செய்யத் தவறி விட்டதால் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியைப் போல சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கிறது. திமுகவை பொறுத்தமட்டில் அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி சொல்வதைப் போல, ஆட்சிக்காக மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த பணிகளை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

குதிரை பேர அதிமுகவின் பினாமி ஆட்சி, திமுகவின் இந்த பணிகளைபார்த்து விட்டு, அரசின் சார்பில் நாங்களும் இந்தப் பணிகளை தொடங்கப் போகிறோம் என அறிக்கை விட்டார்கள். ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, நேரடியாக மேட்டூருக்கு சென்று நானே தூர்வாரப் போகிறேன் என பத்திரிக்கைகளில்,ஊடகங்களில் கோடிக் கணக்கில் செலவு செய்து கொடுத்த விளம்பரங்களை எல்லாம் பார்த்தோம். ஆனால், அந்தப் பணிகள் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கின்றது என்பது, நாட்டுக்கும் தெரியும் அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கும் தெரியும். ஆகவே அந்த தூர் வாரும் பணிகளையெல்லாம் மாவட்ட, ஒன்றிய, கிளை வாரியாக பிரித்துக் கொடுத்து வேலைகளை செய்யப் போகிறோம் என அறிவிப்பையெல்லாம் வெளியிட்டார்கள். ஆனால், பணிகளை செய்வதற்கு பிரித்துக் கொடுக்கவில்லை, கமிஷன் வாங்குவதற்கும், இதை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடிப்பதற்கும் தான் அவர்கள் அந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, நியாயமாக தூர் வாரும் பணிகளில் ஈடுபடவில்லை என்பது தான் உண்மை.

ஏற்கனவே 89 கோடி ரூபாய் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகளால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்  கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முதலிடத்தில் இருந்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எனவே, அவரையும் விசாரிக்க வேண்டும் என்ரு தேர்தல் கமிஷனும், வருமான வரித்துறையும் புகார் கொடுத்திருக்கிறது. ஆனால் அவர் மீது இன்றளவும் எப்.ஐ.ஆர் கூட போடப்படவில்லை.  அதே மாதிரி குட்கா புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகளான ராஜேந்திரன், ஜார்ஜ் போன்றவர்கள் எல்லாம் மாமூல் வாங்கியிருக்கிறார்கள், லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள். புற்றுநோயை வரவழைக்கக்கூடிய தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு துணை நின்றிருக்கிறார்கள்.

அதுகுறித்து விசாரண செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறது. ஆனால், இப்போது இருக்கு தலைமைச் செயலாளர் அது மாதிரியான தாக்கீது வரவில்லை என்று சொல்கிறார். அது அப்பட்டமான பொய். தலைமைச் செயலாளர் என்பவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக்கூடிய அதிகாரிகளுக்கு எல்லாம் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடியவர். அவரே இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் உதாரணங்களாக இருக்கிறது. ஆகவே தான், இந்த விவகாரத்தில் உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இல.கணேசன் அவர்கள் மட்டுமல்ல, ஒரு பக்கம் எச்.ராஜா, வெங்கைய்யா நாயுடு என ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் காரணம் கொண்டும் அது தமிழகத்தில் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அப்படி தமிழகத்தில் அனுமதிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டால், தமிழர்கள் ஒன்றுசேர்ந்து போராடக்கூடிய நிலை உருவாகும். ஏற்கனவே 1965ம் ஆண்டு தமிழ்கத்தில் ஒரு போரே நடைபெற்றிருக்கிறது. எனவே, அந்த சூழல் உருவாகக்கூடிய நிலை உருவாக்கும். அந்த நிலையை அவர்கள் ஏற்படுத்தமாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

தமிழை உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும், மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாகவும் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க-வினர் கூறுகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழுக்கு எப்படிப்பட்ட சிறப்புகள் எல்லாம் கிடைத்தது என்பது உங்களுக்கு தெரியும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தை தலைவர் கருணாநிதி பெற்றுக் கொடுத்தார்கள். பள்ளிகளில் கட்டாயப் பாடமாக தமிழை கொண்டு வந்தார்கள். அந்த நிலையில்தான் தி.மு.க தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைய விஞ்ஞான உலகில் வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிந்துக் கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. அப்படிப்பட்ட சமூக ஊடகங்களில் இருந்தும் அமச்சர்களின் பக்கங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது, நடிகர் கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றுதான் தோன்றுகிறது.
 
கேள்வி: கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறிய டிஐஜி பணிமாற்றம் செய்யப்பட்டார். இப்போது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதுபோல் செய்திகள் வெளி வருகிறதே?

பதில்: அந்த செய்தி உண்மை என்னும்போது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 
கேள்வி: சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?
 
பதில்: ஏற்கனவே சிறையில் தான் இருக்கிறார். சிறையில் இருந்தாலும், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என இப்போது சில நாட்களாக செய்திகள் வருகிறது. அதனால், இதற்கு உரிய நடவடிக்கையை கர்நாடக மாநில அரசுதான் எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பார்கள்,  எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி: நெடுவாசல் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிற நிலையில், 45 கிராமங்களில் பெட்ரோலியப் பொருள் தயாரிக்கும் ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதே?

பதில்: இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் எந்தப் போராட்டம் நடத்தினாலும், அதுபற்றி கவலைப்படுவதில்லை. சட்டப்பேரவையில் இந்த பிரச்னைகளை பற்றி பேசும்போது, அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம் என்று முதல்வரே துணிச்சலாக பேசுகிறார். வளர்மதி என்ற மாணவியை இப்படி குண்டர் சட்டம் போட்டிருக்கலாமா? வேறு சட்டத்தில் வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் சந்தித்திருக்கலாம். ஆனால், குண்டர் சட்டம் போடலாமா என்று கேட்டால், நிச்சயமாக போடுவோம் என்று வாதிடுகிறார். இப்படிப்பட்டவர்களிடம் நிச்சயமாக ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com