குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தமிழக டி.ஜி.பி.யாக தே.க. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறை எழுதிய கடிதத்தை அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் மறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
டி.ஜி.பி.யை நியமிக்க பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், அந்தப் பதவி உயர்வுக் கோப்புடன் இணைக்க வேண்டிய படிவங்களில் விஜிலென்ஸ் விசாரணை நடக்கிறதா அல்லது ஏதேனும் விசாரணை நிலுவையில் இருக்கிறதா என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அனைத்தும் தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது.
பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள அதிகாரி மீது துறை ரீதியாகவோ, விஜிலென்ஸ் ரீதியாகவோ விசாரணை ஏதுமில்லை என்று தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டிய கடமை லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கு இருக்கிறது.
இவ்வளவு விதிமுறைகள் இருந்தும், குட்கா விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரிக்கு எப்படி டி.ஜி.பி. பதவி உயர்வு அளிக்க தலைமைச் செயலாளர் ஒப்புக் கொண்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு இரு வருடங்கள் பணி நீட்டிப்பு என்பதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசும், ஓய்வு பெறும் தினத்தில் எப்படி இரண்டு வருட நியமனத்துக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒப்புக்கொண்டது என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
குட்கா விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்த பிறகு, தலைமைச் செயலாளர் எப்படி உயர்நீதிமன்றத்தில் இப்படியொரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்?
நீதி பரிபாலனத்தைத் தடுக்கும் முயற்சியில் ஏன் தலைமைச் செயலாளரை அரசு ஈடுபட வைக்கிறது? டி.ஜி.பி. பதவி வழங்கியதில் அகில இந்திய போலீஸ் சர்வீஸ் விதிகளையும், தமிழக அரசின் விஜிலென்ஸ் விதிகளையும் அரசு முற்றிலும் மீறியதை மறைக்கும் விதமாகவே இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, குட்கா ஊழல் விசாரணையை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையால் சுதந்திரமாகச் செய்ய முடியாது என்பதற்கு தலைமைச் செயலாளரின் பிரமாணப் பத்திரமே வாக்குமூலமாக இருக்கிறது.
குட்கா ஊழல் புகார் பற்றியும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரிக்கு டி.ஜி.பி. பதவி உயர்வு வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்தும் உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ராமதாஸ்: தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமானவரித்துறையிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து வந்த கடிதத்தை தமிழக அரசு மறைப்பது மன்னிக்க முடியாத குற்றாகும்.
குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருமான வரித் துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், வருமானவரித் துறை கடிதமே எழுதவில்லை என அரசு கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மோசடி குறித்து உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இதை தனிவழக்காக விசாரிக்க வேண்டும். குட்கா ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com