பல நூற்றாண்டுகள் சேதமடையாத வகையில் கலாம் மணி மண்டபம் அமைப்பு

பல நூற்றாண்டுகள் சேதமடையாத வகையில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருப்பதாக, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி ஒருவர்
கலாம் மணிமண்டபத்தின் எழில் தோற்றம்.
கலாம் மணிமண்டபத்தின் எழில் தோற்றம்.

பல நூற்றாண்டுகள் சேதமடையாத வகையில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருப்பதாக, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:
கலாம் மணிமண்டபத்துக்கு அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
பிஹார், உத்தரபிரதேசம், கர்நாடகம், கோவா உள்பட மொத்தம் 7 மாநிலங்களைச் சேர்ந்த 450 பணியாளர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து மணிமண்டபத்தை உருவாக்கியுள்ளோம்.
பாதுகாப்பு,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இந்தச் சாதனையை பல்வேறு தடைகளைத் தாண்டி வடிவமைத்து, ஜூலை 27 ஆம் தேதி திறப்பு விழா காணப்பட உள்ளது.
மணிமண்டபத்தில் உள்ள மஞ்சள் நிற கற்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்தும், சிவப்பு நிற கற்கள் புதுதில்லி ஆக்ராவிலிருந்தும், தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் கிருஷ்ணகிரியில் இருந்தும் கொண்டு வரப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் 150மி.மீ. தடிமனானது. தினசரி 3 ஆயிரம் பேர் நடந்தாலும் தேயாத வகையிலும், சேதமடையாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பக்க நுழைவுவாயில் கதவு மலேசிய தேக்கு மரத்தால் காரைக்குடி செட்டிநாட்டு தச்சர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகள் ஒவ்வொன்றும் தலா 250 கிலோ வீதம் மொத்தம் 500 கிலோ எடை கொண்டது.
காய்கறிகள், மூலிகைகள் மூலம் உருவாக்கப்பட்ட வர்ணங்களால் பூக்கள் படம் வரையப்பட்டுள்ளது. மண்டபத்தின் 4 மூலைகளிலும் 4 வகையான சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதில் ஒன்று, குழந்தைகளின் காதலர் கலாம் என்பதால் குழந்தைகள் விளையாடுவது போன்றும், 2 ஆவது சிலை அறிவியல் சார்ந்ததாகவும், அதாவது குழந்தைகள் கிரகங்களை பார்வையிடுவது போலவும் உள்ளது. 3 ஆவது சிலை குழந்தைகள் அறிவைப் பெருக்க புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பது போன்றும், 4 ஆவது சிலை குழந்தைகள் ஒருவரை ஒருவர் கை தூக்கி விட்டு உதவி செய்யவேண்டும் என்பதை விளக்குவதை போலவும் அமைந்துள்ளது.
இவை தவிர நினைவிடத்தில் கலாம் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள், குடியரசுத் தலைவராகப் பதவியேற்க குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வருவது, வீணை வாசிப்பது, உலகத் தலைவர்களுடன் பேசுவது போன்ற கண்களைக் கவரும் ஓவியங்கள், அவர் பெற்ற விருதுகள், சான்றிதழ்கள் ஆகியனவும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
கலாம் சமாதி முன்பாக 17 மீட்டர் வட்ட வடிவத்தில் பிரார்த்தனைக் கூடம் அமைகிறது. சமாதியிலிருந்து கண்ணாடியில் பார்க்கும் வகையில் அவரது சிலையும் நிறுவப்படுகிறது.
கலாம் நினைவிடம் அருகிலேயே அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடமானது, தற்சமயம் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில், மணிமண்டபம் மட்டும் 2.1 ஏக்கரில் அமைத்துள்ளோம். விரைவில் நினைவிடம் அருகிலேயே அறிவுசார் மையம், கலையரங்கம், கோளரங்கம், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியனவும் அமைக்கப்பட உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com