பாம்பனில் மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
ராமேசுவரத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலர்தூவி அஞ்சலி செலுத்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
ராமேசுவரத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலர்தூவி அஞ்சலி செலுத்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழா தொடர்பான கட்டுமானப் பணிகளை, வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மணி மண்டபத்தின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. கலாமின் 2 ஆவது நினைவு தினமான ஜூலை 27 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில், நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். இந்த திறப்பு விழா நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கும்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும், பாம்பனையும் இணைக்கும் வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ராமேசுவரம் தீவில் உள்ள முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரையிலான சாலைப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இச்சாலையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்படும்.
கலாம் மணிமண்டபம் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களும் பார்வையிட்டு வழிபாடு செய்யும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது: அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தினர் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். கலாமுடன் பணியாற்றியவர்களே இந்த மணிமண்டபத்தை உருவாக்கியிருப்பது பெருமையளிக்கிறது.
மணிமண்டபக் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏதும் இருந்தால் அதனை களைய பாதுகாப்பு அமைச்சரிடம் எடுத்துரைக்கவும், பிரதமர் வந்து இறங்கவுள்ள மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பார்வையிடவும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மத்திய அரசால் மீட்கப்பட்ட 5 மீனவர்களிடம் பேசினேன். அவர்களது வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருக்கிறேன்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க, மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான புதிய திட்டத்தின் கீழ் படகுகள் வாங்கத் தேவையான நிதியுதவியை வங்கிகள் மூலம் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மத்திய அமைச்சர்களுடன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ராமநாதபுரம் கோட்டாட்சியர் பேபி, மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் சு. சமீரன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கே.என். முரளீதரன், மாவட்டச் செயலர் ஆத்ம. கார்த்திக் ஆகியோரும் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com