ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கார்களில் நீலநிற சுழல் விளக்குகளை அகற்ற அரசு உத்தரவு

தமிழக காவல்துறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கார்களில் பொருத்தியிருக்கும் நீலநிற சுழல் விளக்குகளை அகற்றும்படி காவல்துறைக்கு தமிழக அரசின் உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக காவல்துறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கார்களில் பொருத்தியிருக்கும் நீலநிற சுழல் விளக்குகளை அகற்றும்படி காவல்துறைக்கு தமிழக அரசின் உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுழல் விளக்கு வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசு உயர் அதிகாரிகள் சிவப்பு மற்றும் நீலநிற சுழல் விளக்குகளைப் பயன்படுத்த மத்திய அரசின் உள்துறை தடை விதித்தது. சுழல் விளக்குகளை மே 1}ஆம் தேதிக்குள் அகற்றும்படி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இதன்படி தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சுழல் விளக்குகள் அகற்றப்பட்டன.
இருப்பினும் சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கார்களில் நீலநிற சுழல் விளக்குகள் இருப்பது குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, உள்துறைக்கு கடிதம் அனுப்பியது.
அதன்படி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன்மார்டி, தமிழக காவல்துறை டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில், தமிழகம் மற்றும் சென்னை காவல்துறையில் பணியாற்றும் சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது வாகனங்களில் நீலநிற சுழல் விளக்குகள் பொருத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை அகற்றும் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், தங்களது வாகனங்களில் பொருத்தியிருக்கும் சுழல் விளக்குகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், ஏற்கெனவே அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் கார்களில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு நிற சுழல் விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com