கதிராமங்கலத்தில் மக்களின் ஆதரவு இல்லாத திட்டத்தை கைவிட வேண்டும்

மக்களின் ஆதரவு இல்லாத எந்த திட்டத்தையும் கைவிடுவதுதான் அரசின் கடமை என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கதிராமங்கலத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர்.
கதிராமங்கலத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர்.

மக்களின் ஆதரவு இல்லாத எந்த திட்டத்தையும் கைவிடுவதுதான் அரசின் கடமை என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சனிக்கிழமை தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:
1990 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கருப்பு கழிவுகளை கொட்டும் போது தான் இப்பகுதி மக்கள் உண்மையை உணர்ந்து போராட ஆரம்பித்துள்ளனர். கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலத்தில் தற்போது மக்கள் எதிர்க்கும் இந்த திட்டம் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் மக்கள் எதிர்க்கும் இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவாத இந்த திட்டங்களை எதிர்த்து போராடும் பொதுமக்களை காவல்துறையினரை கொண்டு அடக்க நினைக்கக் கூடாது. இந்த பகுதி மக்களின் போராட்டத்துக்கு தேமுதிக எப்போதும் துணை நிற்கும். இங்கிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் அகற்றப்பட வேண்டும். இதற்காக போராடிய பத்து பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களின் ஆதரவு இல்லாத எந்த திட்டத்தையும் தூக்கி எறிவதுதான் அரசின் கடமை என்றார் விஜயகாந்த். ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாழ்வாதாரம் அழிந்து விட்டது

தொடர்ந்து பிரேமலதாவிஜயகாந்த் பேசுகையில், வெளிநாடுகளில் விவசாய நிலங்களை விட்டு விட்டு , மற்ற இடங்களில் தான் இது போன்ற எண்ணை குழாயை அமைக்கின்றனர். அதனால் அவர்களின் இயற்கை வளம் அழியாமல் அப்படியே உள்ளது. ஆனால் இங்கு இதுபோன்ற திட்டங்களால் இயற்கை வளம், மலை வளம், மண் வளம், கனிம வளம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது. மக்கள் வாழ தகுதி இல்லாத பகுதியாக மாற்றி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com