பேராசிரியர் ஜெயராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

ஜெயராமன் தந்தை மரணமடைந்ததையடுத்து மீத்தேன் எதிர்ப்பில் கைது செய்யப்பட்ட அவரை உடனடியாக விடுவிக்குமாறு விடுதலைச்
பேராசிரியர் ஜெயராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்


சென்னை: ஜெயராமன் தந்தை மரணமடைந்ததையடுத்து மீத்தேன் எதிர்ப்பில் கைது செய்யப்பட்ட அவரை உடனடியாக விடுவிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வெகுமக்களின் அறப்போராட்டத்தை ஒருங்கினணத்துப் போராடிவருகிற பேராசிரியர் திரு.த.செயராமன் அவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 22 நாட்களுக்கு மேலாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் பிணையில் வெளிவிடவும் கூடாதென தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மக்கள் நலன்களுக்காகப் போராடுவோர் மீது இவ்வாறு ஒடுக்குமுறைகளை ஏவும் தமிழக அரசின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

அவர் பொய்வழக்கில் சிறைப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் த.செயராமன் அவர்களின் தந்தை தங்கவேல் அவர்கள் நேற்று (22.07.2017) மதியம் மூன்று மணியளவில் திடீரென காலமானார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தனது தந்தையை இழந்து வாடும் செயராமன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஏதுவாக செயராமன் அவர்களை இன்று உடனடியாக பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்ய வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com